ஞாயிறு, 25 ஜூலை, 2010

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல

சென்னையிலிருந்து இந்தோனேஷியாவிற்கு கடத்த இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான கேடமைன் போதை பொருளை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னையிலிருந்து (23.07.2010) சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பன்னாட்டு புறப்பாடு மையத்திற்கு வந்தனர். அவர்களில், தமிழ்மணி (40) என்ற பயணி, சிங்கப்பூர் வழியாக இந்தோனேஷியா செல்வதற்காக வந்தார். அவரது இரண்டு சூட்கேஸ்கள் சோதனையிடப்பட்டன.

அப்போது, தமிழ்மணி பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரின் ஜிப் வைத்த சூட்கேஸ்களை சோதனையிட்டனர். அவற்றில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தேயிலை, ஹெல்த் மிக்ஸ் உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்கள் அதிகமாக இருந்தன.

இவற்றை திறந்து பார்த்த போது, தடை செய்யப்பட்டுள்ள மருந்து வகையான கேடமைன் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர் சோதனையில், தமிழ் மணியின் சூட்கேஸ்களிலிருந்து மொத்தம் 20.5 கிலோ கேடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சர்வதேச மதிப்பு 2 கோடியே 5 லட்சம் ரூபாய். கேடமைன் போன்ற மருந்துகளை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்வதற்கு குவாலியரிலுள்ள போதை பொருள் தடுப்பு அலுவலகத்திலிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், தமிழ்மணி அது போன்ற சான்றிதழ்கள் இல்லாமல், இந்தோனேஷியாவிற்கு கேடமைன் மருந்தை கடத்த முயன்றதால் கைது செய்யப்பட்டார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக