புதன், 9 ஜூன், 2010

தமிழக எம்பிக்கள் குழு ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று திமுக

டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழக எம்பிக்கள் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

ராஜபக்சேவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு டி.ஆர்.பாலு தலைமையில் இன்று சந்தித்தது.
அதில், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், விஜயன், சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஷ், ஜெயதுரை, ஜின்னா, வசந்தி ஸ்டாலின் ஆகியேரும்,

காங்கிரஸைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, விஸ்வநாதன், மாணிக் தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும் இடம் பெற்றிருந்தனர்.

சந்திப்பின்போது, இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள 80,000 தமிழர்களை அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தப் பணிகளை விரைவுப்படுத்துமாறும், தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கிய உதவித் தொகை மூலம் நிவாரணப் பணிகளை உடனே செய்யுமாறும் தமிழக எம்பிக்கள் ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, முகாம்களில் 4,500 தமிழர்கள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களும் உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், அதிபர்-நாடாளுமன்ற தேர்தல் பணிகளால் நிவாரணப் பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், இப்போது அந்த வேலைகள் முடிந்துவிட்டதால் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் ராஜபக்சே தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, இந்தச் சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே. பேச்சுவார்த்தையின்போது எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ராஜபக்சே தெரிவித்தார். மற்றபடி இந்த சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை என்றார்.

சந்திப்புக்கு முன் நிருபர்களிடம் பேசிய எம்பி கனிமொழி, இலங்கையில் முன்பு தமிழக எம்பிக்கள் அதிபர் ராஜபக்சேவிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு கேட்க இருக்கிறோம்.

தமிழர்களுக்கு உரிய உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென்றும், இலங்கை இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம் என்றார்.

முன்னதாக நேற்று மாலை ராஜபக்சே தனி விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் மனைவி ஷிராந்தியும் உடன் வந்தார். ராஜபக்சேவை மத்திய அரசின்சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரனீத் கெளர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

ராஜபக்சேவுக்கு ராஜ வரவேற்பு!:

ராஜபக்சேவுக்கு இன்று டெல்லியில், அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  Read:  In English 
சிவப்புக் கம்பள வரவேற்புக்குப் பின்னர் ராஜபக்சேவும், பிரதம் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் இறுதியில், கூட்டுப் பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

3 நாள் பயணமாக வந்திருக்கும் ராஜபக்சே குடியரசுத் தலைவர் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக