செவ்வாய், 8 ஜூன், 2010

திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங்

திமுக கூட்டணியில், மீண்டும் பாமக சேருவதை காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாமகவின் பதிலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

திமுக, பாமக கூட்டணி அமைவதற்கு எது தடையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, நீங்கள்தான் என்று தமாஷாக கூறினார் கருணாநிதி. ஆனால் உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் தடையாக மாறுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம்,கூட்டணிக்கு பாமக மீண்டும் வருவதை காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் விரும்பவில்லையாம்.

முடிந்தவரை கடுமையாக விமர்சித்து விட்டு, தடாலடியாக கூட்டணியை விட்டு விலகிச் சென்ற பாமக, இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணிக்கு முயல்வதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் பாமக கூட்டணிக்கு திரும்பினால், வருகிற சட்டசபைத் தேர்தலில் தங்கள் விருப்பப்படியான சீட்கள் கிடைக்காது என்ற அச்சமும் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒன்றின் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், பாமக இன்னும் தனது முடிவைச் சொல்லவில்லை. அது கூட்டணியில் மீண்டும் சேர்ந்தாலும் சரி, சேராவிட்டாலும் சரி, கூட்டணியில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கூட்டணிக்குப் பலமும் கிடைக்கப் போவதில்லை. பலவீனமாகப் போவதும் இல்லை.

கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள முக்கியத்துவம் அப்படியேதான் உள்ளது. பாமக சேர்ந்தாலும் கூட அது தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் 80 சீட் வரை கேட்க காங்கிரஸ் தயாராகி வருகிறதாம். ஆனால் பாமக கூட்டணிக்கு வந்தால் இதில் பாதிப்பு ஏற்படும். பாமக 40 சீட் வரை கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் நேற்று முதல்வர் கருணாநிதியை பாமக தூதுக்குழு சந்தித்தபோது பேசியதாக கூறப்படுகிறது. பாமக 40 சீட் கேட்டால் காங்கிரஸுக்கான சீட் குறையும் என காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.

இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முடிவை அறிவுக்கவுள்ளார். அதுவரை காத்திருக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக