செவ்வாய், 8 ஜூன், 2010

தேமுதிகவுடன் கூட்டணிஅதிமுக 50 முதல் 60 இடங்கள் தந்தால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம்

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிர முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தையையும் அதிமுக ஆரம்பித்துவிட்டது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பின் தேர்தலை முன் கூட்டியே நடத்த திமுக அறிவிப்பை வெளியிடலாம் என்று கருதப்படுகிறது.

அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இதையே கருதுகின்றன. இதனால் தான் திமுகவுடன் வேகமாக கூட்டணி அமைக்க பாமக தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன. மேலும் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதால், வெற்றி உறுதி என்ற நினைப்பில் உள்ளது திமுக. இதனால் பல அதிமுக தலைகளும் திமுகவுக்கு தாவ ஆரம்பித்துள்ளன.

இதனால் 2011ல் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் அதிமுக மற்றும் அதன் தலைவி ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் மிக மு்க்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது.

ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க திட்டமிட்டுள்ள திமுகவுக்கும் இது மிக மிக முக்கியமான தேர்தல்.

2004ம் ஆண்டு முதல் இரண்டு மக்களவைத் தேர்தல்களி்ல் தோல்வி, ஒரு சட்டசபைத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, 11 இடைத் தேர்தல்களில் தொடர் தோல்வி என்று ஜெயலலிதாவுக்கு தோல்விகள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந் நிலையில், 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இப்போது இருக்கும் இதே போன்ற மிதப்பில் இருந்த திமுகவை ஒரு மெகா கூட்டணி அமைத்து காலி செய்தது போன்ற, ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் மதிமுக, பாமக, பாஜக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ், சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி என்று படு 'வெரைட்டியான' கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி கண்டார் ஜெயலலிதா.

ஆனால், அப்போது காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டது.

இப்போது காங்கிரஸ் திமுகவை விட்டு விலகி வராது என்பது உறுதியாகிவிட்டதாலும் பாமகவும் திமுக கூட்டணிக்கு அலைய ஆரம்பித்துவிட்டதாலும், எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

மதிமுக, இடதுசாரிகளை வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தால் திமுக கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமே இல்லை என்பதை ஜெயலலிதா உணர்ந்துவிட்டார். இரும்புக் கோட்டையான அதிமுகவை அந்த அளவுக்கு துரு பிடிக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா.

திமுக- காங்கிரஸ்-பாமக- விடுதலை சிறுத்தைகள் என்ற வலுவான கூட்டணியை எதிர்கொண்டு, தன்னையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேருவது தான் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தல் வரை விஜய்காந்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான் இருந்தார் ஜெயலலிதா. இதனால் தான் அவரை குடிகாரர் என்று விமர்சித்தார். பதிலுக்கு ஜெயலலிதா தான் ஊற்றிக் கொடுத்தாரா என்று கேட்டார் விஜய்காந்த்.

ஆனால், இப்போது ஜெயலலிதாவைப் போலவே விஜய்காந்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவருக்கு தொகுதிக்கு ஏற்ப 6 முதல் 10 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் டெபாசிட்டை காப்பாற்றுவதே கஷ்டமாகி வருகிறது.

அதே நேரத்தில் இவர் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்குப் போக வேண்டியவை. இந்த வாக்குகள் அதிமுகவுக்கு வந்தால் திமுகவை எதி்ர்கொள்வது சிரமமாக இருக்காது என்று ஜெயலலிதா கருதுகிறார்.

விஜய்காந்துடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிடுமாறு ஜெயலலிதாவின் நலம் விரும்பிகளான 'அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர்' உள்ளிட்டோரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

அதே போல தனித்துப் போட்டி போட்டு போட்டு தோற்று தோற்று வெறுப்பில் இருக்கும் தனது கட்சியினரை உற்சாகப்படுத்தவும் தேர்தல் செலவுகளை சமாளிக்கவும் அதிமுகவுடன் கூட்டணி சேருவதே நல்லது என்று விஜய்காந்தும் கருதுவதாகத் தெரிகிறது.

இதனால் குடி, ஊற்றிக் கொடுத்தது போன்ற சமாச்சாரங்களை அப்படியே மறந்துவிட்டு எப்படியாவது கைகோர்த்துக் கொள்ள அதிமுகவும், தேமுதிகவும் தயாராகிவிட்டன.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேமுதிக ஓட்டுக்களைப் பிரித்ததால் தான் சுமார் 90 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே போல திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் 'மைனாரிட்டியாக' ஆட்சியைப் பிடிக்க, அதன் வாக்குகளையும் தேமுதிக பிரித்து பல தொகுதிகளில் தோல்விக்கு வழி வகுத்தது தான் காரணம்.

இந் நிலையில் விஜய்காந்துடன் கூட்டு சேர்ந்து நின்றால், பெரும்பாலான தொகுதிகளின் முடிவு தங்களுக்கு சாதகமாக திரும்பி விடும் என்று அதிமுக கருதுகிறது.

அதிமுகவே தானாக விரும்பி கூட்டணி சேர ஆரவம் காட்டுவதால் விஜயகாந்தும் இதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இரு கட்சிகளிடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகத் தெரிய வருகிறது.

அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன் எம்பி, சசிகலா, எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் சகோதரர்) ஆகியோரும் தேமுதிக சார்பில் அவைத்த லைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இது குறித்து சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது தேமுதிக 90 தொகுதிகளைக் கேட்டுள்ளனர். அதாவது சுமார், 40 சதவீத இடங்களை தங்களுக்குக் கோரியுள்ளனர் (50 சதவீதம் கேட்டால் ஆட்சியையை கேட்பது போல இருக்கும் என்பதால் 40 கேட்டிருப்பார்கள் போல).

இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக தரப்பு 15 சதவீத இடங்கள் தருவதாகக் கூறியுள்ளது. கடந்த தேர்தலில் பாமகவுக்கு அதிமுக சார்பில் தரப்பட்டது போல சுமார் 35 இடங்கள் தருவதாக அதிமுக கூறியுள்ளது.

ஆனால், அதை தேமுதிக தரப்பு ஏற்கவில்லையாம். 30 சதவீத இடங்கள்.. அதாவது 70 இடங்களாவது வேண்டும் என்று கோரி வருகின்றனராம்.

ஆனால் அவ்வளவு தொகுதிகளை தர இயலாது என்று அதிமுக தரப்பு கூறியுள்ளது. மதிமுக, இடதுசாரிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதால் 70 சீட்கள் தருவது கஷ்டம் என்று அதிமுக கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சந்தித்து பேச்சு நடத்தவும் இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. 50 முதல் 60 இடங்கள் தந்தால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்றே தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக