கோவையில் கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கியது.
பேரணியில் 40 அலங்கார ஊர்திகள் அணிவகுக்கின்றன. அவற்றில் இலக்கியம், கலை, வரலாறு, தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வரலாற்று சின்னங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகிறது.
அலங்கார ஊர்தியின் நடுவில் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. தவில், நாதஸ்வர இசை மற்றும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், மானாட்டம் உள்ளிட்டவைகள் இடம்பெறுகிறது. கன்னியாகுமரி நையாண்டிமேளம், ஒப்பாட்டம், வாடிப்பட்டி மேளம், கேரளாவில் புகழ்மிக்க செண்டைமேளம் ஆகியவைகளை இசைத்தவாறு கலைஞர்கள் பேரணியில் செல்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பேரணியில் அணிவகுத்து செல்கிறார்கள்.
கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து மாநாட்டு வளாகம் வரை 8 கிலோமீட்டர் தூரம் பேரணி நடக்கிறது. 6 வழி சாலையான அவினாசி ரோட்டில் ஒரு பகுதி வழியாக பேரணி நடைபெறுகிறது. மறுபகுதி பேரணியை பொதுமக்கள் பார்த்து மகிழ்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு பேரணியை ஜனாதிபதி பிரதீபா பட்டீல், கவர்னர் பர்னாலா, முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிடுவதற்காக மருத்துவ கல்லூரி அருகே குண்டு துளைக்காத வகையில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேடைக்கு எதிரே பத்திரிகையாளர்களுக்கு 2 மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் பேரணியை பார்வையிடுவதற்காக மேலும் 6 மேடைகள் வழிநெடுக அமைக்கப்பட்டுள்ளன.
அவினாசி ரோடு ஹோப் காலேஜ் முதல் ரங்கவிலாஸ் மில் வரை 11/2 கிலோமீட்டர் தூரம் இந்த மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பேரணியை தடையில்லாமல் பார்த்து ரசிப்பதற்கும் பீளமேடு பகுதியில் நீண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. பேரணியில் செல்பவர்களுக்காக குடிநீர், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. பேரணி செல்லும் வழியில் ஆங்காங்கே சுகாதார வசதியும் உள்ளது. பேரணி ஒரு இடத்தை கடக்க ஒரு மணி நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரணி செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக