திங்கள், 7 ஜூன், 2010

ரவூப் ஹக்கீம் தமிழ் - முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்களின் பங்களிப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் இந்தியாவின் பரிமாணத்தை உள்நாட்டு அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு, தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் -  முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்களின் பங்களிப்பு   இன்றியமையாததாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னர் அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய பிரச்சினைக்கான  தீர்வுத் திட்டத்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பு தொடர்பாகவும் நேற்று தெளிவுபடுத்துகையிலேயே         ரவூப் ஹக்கீம்  எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்து இது குறித்து தெளிவுபடுத்துகையில்,    தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும்        ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே பாராளுமன்ற நடவடிக்கைகளிலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.    சிறுபான்மை அரசியல் கட்சிகளின் ஒற்றுமை தேசிய பிரச்சினைகளுக்கான    தீர்வு விடயத்தில் ஆதிக்கம் செலுத்தும்.
அத்தோடு   எமது பிரச்சினைகள் தொடர்பாக    அரசாங்கத்தை தொடர்ச்சியாக   வலியுறுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.    உள்நாட்டில் யுத்தம் முடிந்து விட்டது.     அதனால் தேசிய பிரச்சினையும் தீர்ந்து விட்டது என கருத முடியாது.            சிறுபான்மை மக்களின் அரசியல் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை முன் வைக்கவேண்டும்.
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிடக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அயல் நாடென்றபடியால் மட்டுமல்ல          நீண்டகால உறவும்  ,    கலாசாரம் பின்னிப பிணைந்த நாடென்ற வகையிலும் அதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இதனை தற்போதைய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக