வெள்ளி, 25 ஜூன், 2010

நிலம் ஆக்கிரமிப்பு இயேசு அழைக்கிறார்,அப்பல்லோ மருத்துவமனை , அடையாறில் உள்ள மலர் மருத்துவமனை


நிலம் ஆக்கிரமிப்பு: 10 தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
 சென்னை பாரிமுனையைச்சேர்ந்த கிருஷ்ண மணி என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில் கூறி இருப்பதாவது:

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி, யூ.டி.ஐ. நிறுவனம், இயேசு அழைக்கிறார், ஒலிம்பிக் கார்டு நிறுவனம், ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனை உள்பட 10 தனியார் நிறுவனங்கள், தங்கள் இடம் அருகே உள்ள மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்துள்ளன.

வேலி போட்டு அந்த இடங்களை “பார்க்கிங்” பகுதியாக மாற்றியுள்ளனர். பொதுமக்கள் யாரையும் அந்த நிறுவனங்கள் அந்த இடங்களுக்குள் அனுமதிப்பது இல்லை.

மாநகராட்சி இடங்களை அனுபவித்து வரும் இந்த நிறுவனங்கள் இதற்காக அரசிடமோ, மாநகராட்சியிடமோ முன் அனுமதி எதுவும் பெறவில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தடுத்து அந்த இடங்களை மீட்க வேண்டும் என்று தனது மனுவில் கிருஷ்ண மணி கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி திருஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது.

அரசு தரப்பில் வக்கீல் ராஜா கலிபுல்லா ஆஜராகி வாதாடினார். நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எந்த நிறுவனமும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றார்.

இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள இடங்களை ஆக்கிரமித்துள்ளதற்கு மனுதாரர் புகைப்படம் ஆதாரம் இணைத்துள்ளார். ஆனால் நீங்கள் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டனர்.

மேலும் தனியார் நிறுவனங்கள் மாநகராட்சி இடத்தில் வேலி போட்டுக் கொள்ள எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

பிறகு நீதிபதிகள் தீர்ப்பளிக்கையில், மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக 10 தனியார் நிறுவனங்களும் 2 வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக