புதன், 2 ஜூன், 2010

கருணாநிதியை சந்தித்த பாமக எம்.எல்.ஏக்கள்- ராஜ்யசபா 'சீட்' கேட்கவில்லை!

சென்னை: முதல்வர் கருணாநிதியை இன்று பாமக எம்.எல்.ஏக்கள், கட்சியி்ன் தலைவர் ஜி.கே.மணி தலைமையில கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

கூட்டத்துக்குப் பின நிருபர்களிடம் பேசிய ஜி.கே.மணி, முதல்வருடன் ராஜ்யசபா தேர்தல் குறித்துப் பேசவில்லை என்றும், கூட்டணியின் சாரம்சம் குறித்து மட்டுமே பேசியதாகவும், பேச்சுவார்த்தை விவரங்களை ராமதாசிடம் தெரிவிப்போம் என்றும் கூறினார்.

முன்னதாக, மீண்டும் திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பாமகவுக்கு இப்போதைய ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்தை வழங்க வேண்டும் என்றும் அக் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், முதல்வருக்குக் கடிதம் எழுதினார்.

இதையடுத்து பாமகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கத் தயார் என்றும், ஆனால் அடுத்த ராஜ்யசபா தேர்தலின்போதுதான் (2013ம் ஆண்டு) பாமகவுக்கு ஒரு சீட் தர முடியும் என்றும் திமுக கூறியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நேற்று ராமதாஸ் தலைமையில் நடந்தது. மிக ரகசியமான முறையில் நடந்த இக் கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தைலாபுரம் தோட்டத்தின் வாயிலிலேயே நிறுத்தப்பட்டனர்.

கூட்டம் முடிவடைந்ததும், பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதன்படி பாமக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசுவது என்றும், அதில் பேசப்பட்ட கருத்துகளை நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் எடுத்து கூறுவது என்றும், அதன் அடிப்படையில் அவர் முடிவெடுக்க அதிகாரம் வழங்குவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கருணாநிதியை சந்தித்து என்ன பேசப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு மணி பதிலளிக்கவில்லை.

இருப்பினும் முதல்வரை சந்தித்து இந்த ராஜ்யசபா தேர்தலிலேயே ஒரு சீட் தர வேண்டும் என பாமக கோரலாம், அதற்கு முதல்வர் கூறும் பதிலைப் பொறுத்து, கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸின் பதில் அமையலாம் என்று கருதப்பட்டது.

இந நிலையில் இன்று பாமக எம்எல்ஏக்கள், பாமக முன்னாள் மத்திய இணையமைச்சர் வேலு ஆகியோருடன் முதல்வரை சந்தித்தார் ஜி.கே.மணி. அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனும் உடனிருந்தனர். 40 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது.

இச் சந்திப்புக்குப் பின் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறுகையில்,

திமுக கூட்டணியில் மீண்டும் பாமகவை சேர்ப்பது என்று திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எடுத்த முடிவுகள் குறித்து பாமக நிர்வாக குழு கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் விளக்கி கூறினோம். திமுக சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அவர் தெரிவித்தார். எங்கள் கருத்தை அவரிடம் தெரிவித்தோம். அவர் சொன்ன கருத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் தெரிவிப்போம். அவர் இறுதி முடிவு எடுப்பார் என்றார்.

ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு ஒரு சீட் கேட்டீர்களா என்று கேட்டதற்கு, அதுபற்றி எதுவும் பேசவில்லை என்றார்.

திமுகவுடன் கூட்டணி சேருவீர்களா என்று கேட்டதற்கு,
திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவிலேயே பாமகவை கூட்டணியில் சேர்ப்பது என்று முடிவு எடுத்து விட்டார்கள். எனவே, கூட்டணியில் மாறுபாடு இல்லை. இன்று எங்களிடம் முதல்வர் சொன்ன கருத்துக்களை எங்கள் தலைவர் டாக்டர் ராமதாசிடம் கூறுவோம். முடிவை அவர் எடுப்பார் என்றார்.

திமுக முடிவில் மாற்றமில்லை-மு.க.ஸ்டாலின்:

பின்னர் வெளியே வந்த மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணியில் சேர்த்தமைக்காக பாமக குழுவினர் நன்றி தெரிவித்தனர். மற்றபடி ராஜ்யசபா உறுப்பினர் பதவி பற்றி ஏதும் பேசவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக