திங்கள், 14 ஜூன், 2010

பூநகரிக்கும் யாழ்-குருநகருக்கும் படகுச் சேவை நேற்று

பூநகரிக்கும் யாழ்-குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு இந்த படகுச் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்தப் படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக நான்கு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம், தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை இந்த படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் பெரிதும் நண்மையடையவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பூநகரியிலிருந்து குருநகருக்கு தற்பொழுது சென்றுவரும் பொதுமக்கள் வழங்கும் பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக படகின் மூலம் செல்லும் பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி - குருநகர் பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக