திங்கள், 14 ஜூன், 2010

ரயில் பாதை தகர்ப்பு , தமிழர் தேசிய கட்சியைச் சேர்ந்த 10 பேரை

சந்தேகத்தின் அடிப்படையில் தமிழர் தேசிய கட்சியைச் சேர்ந்த 10 பேரை அழைத்து விசாரித்து வருகின்றனர் போலீஸார். அவர்கள் வசம், ஒரு தனியார் டிவியின் செய்தியாளரும் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில் பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக நேற்று காலையில், கியூ பிரிவு எஸ்.பி அசோக்குமார் விசாரணையை முறையாக தொடங்கினார். அவர் விழுப்புரம் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

வழக்கு குறித்து நேற்று இரவு டிஜிபி லத்திகா சரண் கூறுகையில்,

தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு துலக்கி வருகிறோம். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் துண்டு பிரசுரம் ஒன்று கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் உள்ள வாசகங்கள் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்ததை எதிர்க்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கருதுகிறோம்.

துண்டு பிரசுரத்தில் உள்ள வாசகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தம்பிகள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், குற்றவாளிகள் பிரபாகரனின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்றும் கருதுகிறோம்.

இதுவரை சந்தேகத்தின் பேரில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்து உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கியூ பிரிவு போலீசார் அனைவரும் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குற்றவாளிகள் பிடிபடும் வரை அவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். விசாரணையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கியூ பிரிவு போலீசாருக்கு உதவியாக உள்ளூர் போலீசாரும், ரயில்வே போலீசாரும் செயல்படுவார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட துண்டு பிரசுரத்தில் உள்ள கையெழுத்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தில் நக்சலைட்டுகள் தொடர்பு இல்லை என்று ஏற்கனவே கூறி விட்டேன். விழுப்புரம் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிராக ஏற்கனவே பலர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களிடமும், விசாரணை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரமுடியும் என்று கருதுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக