புதன், 16 ஜூன், 2010

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

செப்டெம்பர் மாதத்தில் முன்னெடுக்கவுள்ள அடுத்த போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளவும், 9620 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி  தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மேலும் தகவல் தருகையில், திட்டமிடல், வீடமைப்பு, மீன்பிடி, உள்ளூராட்சி, நீர், மின்சாரம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் உள்ளடங்கலாகவே ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பனை அபிவிருத்தி மற்றும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கியதாக மாவட்ட திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. துரிதமாக மீளப்பெறல் திட்டம், நீண்டகால அவிவிருத்தி திட்டம், வருடாந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.
விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 5000 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள என்றார். விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய தலா பத்தாயிரம் ரூபா வீதம் அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், தலா ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மூன்று புசல் நெல்கதிர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 35 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு 3277 வீடுகள் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2100 வீடுகள் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
முல்லை மாவட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 60 வீதமான மாணவர்களின் வருகையும், 80 வீதமான ஆசிரியர்களின் வருகையும் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக