செவ்வாய், 18 மே, 2010

ஒரு தமிழன் கொடி கட்டிப் பறப்பது சில பேருக்கு பிடிக்கவில்லை,பாரதிராஜா .கலைஞர்

சென்னை:  தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களின் நிலையை எடுத்துச் சொல்லும் தொடர்களை பாரதிராஜாவும், பாலச்சந்தரும் இயக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி [^] கேட்டுக் கொண்டார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தெக்கித்தி பொண்ணு தொடரின் 500வது நாள் நிகழ்ச்சியில், அதில் நடித்த கலைஞர்கள் மற்றும் அதன் இயக்குனர் [^] பாரதிராஜா ஆகியோருக்கு விருது வழங்கினார் முதல்வர். பின்னர் அவர் பேசியதாவது:

இந்தத் தொடரை 500 நாட்கள் முழுமையாக நாள் தவறாமல் நான் பார்த்தவனல்ல; ஏறத்தாழ 300 நாட்களாவது இந்தத் தொடரை நான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த தொடர்களில் அதிக நாட்கள் பார்த்த தொடர் இந்த தெக்கித்தி பொண்ணுதான்.

இந்த அருமையான ஓவியம், தமிழ்நாட்டு மக்களுடைய மனத்திரையிலே பதிகின்ற அளவுக்கு, இன்னமும் வராதா என்ற ஏக்கத்தை எழுப்புகின்ற அளவுக்கு, இந்த ஒரு நல்ல நிகழ்ச்சியிலே நம்மையெல்லாம் சந்திக்க வைத்திருக்கிறது.

பாரதிராஜா என்ற இந்த தம்பி மீது இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக ஒரு அன்பு, பாசம் உண்டு. பாரதிராஜாவுக்கும் கலை உலகத்திலே உள்ள சிலருக்கும், அல்லது கலை உலகத்திலே இல்லாத சிலருக்கும் ஏற்படுகின்ற கசப்புகள், அதன் காரணமாக உருவாகின்ற நிலைமைகள், இவை எல்லாம் வரும்போது கூட நான் பாரதிராஜாவுக்காக பரிந்து பேசும்போது, தமிழகத்தில், கலையுலகத்தில் ஒரு தமிழன் கொடி கட்டிப் பறப்பது சில பேருக்கு பிடிக்கவில்லை, அதனால் இதெல்லாம் நடைபெறுகிறது என்று சொல்லியிருக்கிறேன்.

அப்போது எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஒன்றும் கிடையாது.

அவர் இங்கே சொன்னாரே.. பாதை தவறிப் போனேன் என்று, அப்படி சில நேரங்களில் பாதை தவறியதும் உண்டு. ஆனால் அதற்கு காரணம் அவரல்ல. நடந்து வரும்போது தெரியாமல் வழுக்கி விழுந்து விட்டால் அது நம்முடைய குற்றமல்ல, பாதையின் குற்றம். அவர் பாதை தவறியதற்கு காரணம் நாம் சரியான பாதை அல்ல போலும் என்றுதான் நான் என்னைப் பற்றி எண்ணிக் கொள்வேனே அல்லாமல், அவர் மீது நான் வருத்தப்பட்டதில்லை.

எங்கே பாதை தவறினாலும் வீடு வந்து தான் சேருவார் என்று எண்ணுகின்ற குடும்பப் பெண்ணைப் போல நான் நம்பிக்கையோடுதான் இருந்தேன். அந்த நம்பிக்கை வெற்றிகரமாக இன்று நிறைவேறி இருக்கிறது என்பதை இங்கே கண்டீர்கள்.

வைரமுத்து எழுதுகின்ற எந்தக் கவிதையானாலும் மண்வாசனை வீசும். அதைப் போல தம்பி பாரதிராஜா எடுக்கின்ற எந்தப் படமானாலும், எந்த எழுத்தானாலும், எந்த உரையாடல் ஆனாலும் எல்லாவற்றிலும் மண் வாசனை வீசும்.

இந்தத் தொடரைப் பார்த்தால் இன்றைக்கிருப்பார் நாளைக்கு இல்லை என்ற இந்த உலகத்தைப் பற்றி பாட்டு இருக்கிறதே, அது மாதிரி பலர் வருவார், பலர் போவார். ஆனால் எத்தனை பேர் போனாலும்- அது திமுக மாதிரி. எத்தனை பேர் என்னிடத்திலிருந்து போனாலும், கழகம் அப்படியே இருக்கும். அந்த சக்தி திமுகவுக்கு எப்படி உண்டோ, அதைப் போல பாரதியின் இந்தத் தொடருக்கு யார் யார் இடையிடையே போனாலும், அது தம்பி நெப்போலியனாக இருந்தாலும் தொடர் அப்படியே தான் போய்க் கொண்டிருக்கும்.

தெக்கித்தி மண்ணின் வாசனை வீசுகின்ற தொடர்கள் தம்பி பாரதிராஜாவால் இந்தத் தொலைக்காட்சிகளில், தொடர்ந்து வர வேண்டும். அது அந்தந்த பகுதிகளின், வட்டாரத்தின் நிலைப்பாடுகளை, அங்கே இருப்பவர்களின் நாகரிகத்தை நினைவூட்டுகின்ற வகையிலே பண்பாடுகளை ஞாபகப்படுத்துகின்ற வகையிலே, அதன் அடிப்படையிலே அறிவுரைகளை வழங்குகின்ற வகையிலே பல தொடர்கள் தம்பி பாரதிராஜா அவர்களால் வரவேண்டும்.

பாரதி தன்னை நண்பராக இந்த துறைக்கு தன்னை அறிமுகப்படுத்தியவராக கருதி மரியாதை காட்டுகின்ற இயக்குநர் [^] சிகரம் பாலச்சந்தர் அவர்களும் இது போன்ற அந்தந்த வட்டாரத்தின் நிலைமைகளை சொல்லுகின்ற அளவிற்கு தொடர்களை உருவாக்கித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக