வெள்ளி, 23 ஏப்ரல், 2010

பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஏழாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் குழுக்களில் பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபை நடவடிக்கைகள் புதிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானபோது காலை 9.50 மணியளவில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
குறிப்பு –1994 ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் (798) எழுநூற்றித் தொண்ணூற்றெட்டு வாக்குகளை மட்டும் பெற்று பாராளுமன்றத்தில் முதல் தடவையாக அறிமுகமான சந்திரகுமார் முருகேசு இன்று இணக்க அரசியலின்மூலம் குழுக்களின் பிரதித் தலைவராக பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை காண்பிக்கின்றது
சபாநாயகரின் அறிவிப்பையடுத்து முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் பிரதி சபாநாய கராகவிருந்த பிரியங்கர ஜயரட்னவின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.
வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பிரதி சபாநாயகரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குழுக்களின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிமொழிந்தார். குழுக்களின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவானார்.
பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக