வெள்ளி, 23 ஏப்ரல், 2010

பெரும் தொகையான பணத்தை கப்பமாக கோரி கடந்த செவ்வாய்க்கிழமை இருவர் கடத்தப்பட்ட நிலையில்  அவ்விருவரையும் நேற்று வியாழக்கிழமை மீட்டபொலிசார், இந்த கடத்தலுடன் தொடர்புடைய எண்மரை கைதுசெய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நவாலிப் பகுதியிலிருந்து  யாழ் நகர்நோக்கி வந்துகொண்டிருந்த இருவரை வானொன்றில் வந்தவர்கள் கடத்தி சென்றதுடன், அவர்களை விடுவிக்கவேண்டுமாயின் 50 இலச்சம் பணம் தருமாறு குடும்பத்தவர்களை மிரட்டியுள்ளனர். கையடக்கத் தொலைபேசி மூலம் இவ்விருவரது குடும்பங்களுடன் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், முதலில் 50இலச்சம் ரூபாவும், பின்னர் தலா 25இலச்சம் ரூபாவும் நகைகளும் கோரியுள்ளனர்.
கடத்தல்காரர்கள் சுண்டுக்குளி சுவாத் வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அங்கேயே கடத்தப்பட்ட இருவரையும் வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் கடத்தப்பட்ட வாகனங்கள் திருத்தும் நவாலியை சேர்ந்த வி.மகேஸ்வரன் மற்றும் மின்பொறியியலாளரான சி.மகேந்திரனின் குடும்பத்தவர்கள் மானிப்பாய் பொலிஸாசாருக்கு முறையிட்டிருந்தனர். இதையடுத்து மானிப்பாய் பெலிஸாசார் கடத்தல்காரர்களிடமிருந்து கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வந்த கையடக்க தொலைபேசிகளின் இலக்கங்கள் மூலம் அவர்களை கண்டறிய முற்பட்டதுடன் கடத்தல்காரர்களின் கோரிக்கையை ஏற்று கடத்தப்பட்டவர்களை விடுவிக்க பணம் தருவதாக குடும்பத்தவர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கடத்தல்காரர்கள் தெரிவித்த சுண்டுக்குளி விலாசத்துக்கு நேற்று காலை 9மணியளவில் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர் போல் சென்ற பொலிசார் கடத்தல்காரர்களிடம் பணம் கொடுப்பது  போல்  நடித்து பணத்தை பெறவந்த மூன்று கடத்தல்காரர்களையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணைகள் மூலம் குடாநாட்டைச் சேர்ந்த மேலும் ஐவரை சில மணிநேரத்தில் மடக்கி பிடித்தனர். இவர்கள் ஆணைக்கோட்டை, மீசாலை, மற்றும் இளவாலை பகுதிகளை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டது.
கடத்தல்காரர்களை சுண்டுக்குளியிலுள்ள வீட்டில் வைத்து பிடித்தபோது, கடத்தப்பட்ட இருவரும் கைகள் பின்புறம் கம்பிகளால் கட்டப்பட்டும் வாய்க்குள் பேப்பர்கள் அடைக்கப்பட்ட நிலையிலும் வீட்டு கிணற்றுக்கு அருகிலிருந்து சோர்வடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இவர்கள் இருந்த இடத்தில் பெரிய குழிகளையும் கடத்தல்காரர்கள் வெட்டியிருந்ததால் பணம் கிடைக்காவிடின் அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த முற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கடத்தப்பட்ட நேரத்திலிருந்து நேற்றுக் காலைவரை இருவரும் மீட்கப்படும் வரை இருவருக்கும் ஒவ்வொரு மோதகமே சாப்பிடக்கொடுத்ததாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸாசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விபரம் எதனையும் வெளிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக