ஞாயிறு, 4 அக்டோபர், 2026

Flydubai விமான விபத்து - உண்மையில் ஒரு பெரிய Miracle அதிசயம்தான்

Sridhar Subramaniam  : flydubai சம்பவம் பற்றிப் பல்வேறு கருத்தியல்கள் சமூக ஊடகங்களில் உலவுகின்றன. தாக்குதலைத் துவக்கிய ஓமானைச் சேர்ந்த பைலட்டின் பெயர் வெளியாகியதில் இருந்து இந்துத்துவர்கள் உற்சாகத்துடன் அதனைப் பகிர்ந்து எழுதி வருகிறார்கள். 
ஸ்கோர் செய்ய ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்ததை பிரதமர் மோடியும் சரியாகப் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்துத்துவ எதிர்ப்புத் தரப்பில் இரண்டு எதிர்வினைகள் வருகின்றன. ஒன்று: கனத்த அமைதி. இரண்டாவது கான்ஸ்பிரசி தியரிகள்.
இரண்டுமே எதிர்பார்த்ததுதான். செப்டம்பர் 11க்கே தியரிகள் இன்னமும் ஓடுகின்றன எனும் போது இதில் வருவதில் ஆச்சரியமில்லை. 
ஆனால் நடந்த விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது, இது நிஜத்தில் மதவாதம் சார்ந்த தீவிரவாத சம்பவமாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பது புரியவருகிறது. 
உண்மையில் என்ன நடந்தது என்பதை ஹிண்டு இன்று ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறது.
கேள்வி: இரண்டு பைலட்டுகளுமே காயமுற்ற நிலையில் விமானம் எப்படி தரையிறங்கி இருக்க முடியும்? பிளம்பர் ஒருவர் இறக்கினார், கார்பெண்டர் இறக்கினார் என்றெல்லாம் டிரம்ப் விடும் உருட்டுகள் உண்மையா? 
பதில்: விமானத்தைத் தரையிறக்கியது Flydubaiயைச் சேர்ந்த இரண்டு கூடுதல் பைலட்டுகள். இவர்கள் விமானத்தில் பயணிகளாக பயணித்து வந்திருக்கின்றனர். காக்பிட் கதவு திறக்கப்பட்டதும், இதர பயணிகள் ஓமானி பைலட்டை பிடித்துக் கொள்ள, இந்த கூடுதல் பைலட்டுகள்தான் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து இறக்கி இருக்கின்றனர்.
கேள்வி: ஓமானி பைலட்டுக்கு கத்தி எப்படிக் கிடைத்தது?
பதில்: அவர் கத்தி எதையும் எடுத்துக் கொண்டு போகவில்லை. Crash Axe எனப்படும் சிறிய அளவிலான உடைக்கும் கோடரி ஒன்று காக்பிட்டில் இருக்கும். இது அவசரகால தேவைக்கு கண்ணாடிகளை உடைத்து விமானத்தை விட்டு வெளியேற உதவும். நமது ரயில்களிலும் இதைப் பார்க்க முடியும். இதனை ஐக்கிய அமீரக தலைமை அரசு வழக்கறிஞரே பிபிஸி பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஹிண்டு தொடர்பு கொண்ட flydubai அதிகாரிகளும் இதை உறுதி செய்திருக்கின்றனர்.
கேள்வி: சம்பவம் நடக்கும்போதே இஸ்ரேல் ராணுவம் எப்படி போர் விமானங்களை அனுப்பியது? 
பதில்: காக்பிட்டில் கைகலப்பு நடக்கும் போதே அவசர சிக்னல்கள் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இரண்டு சமிக்ஞை எண்கள் போயிருக்கின்றன: 
7700: இது விமானம் ஆபத்தில் இருக்கிறது என்று சுட்டும் சமிக்ஞை எண். பொதுவான அனைத்து எமெர்ஜென்சிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 
7500: இது விமானம் சட்டவிரோதமாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படும் ஆபத்தில் இருக்கிறது என்பதை சுட்டும் சமிக்ஞை எண். அதாவது ஹைஜாக் அல்லது தீவிரவாத செயல்களை சுட்டும் எண். 
இந்த 7500தான் ராணுவங்களை அலர்ட் செய்திருக்கிறது. இஸ்ரேல் மட்டுமல்ல. சவுதி கட்டுப்பாட்டு மையங்களுக்கும் இந்த சமிக்ஞை போனதால் சவுதி ராணுவமும் தங்கள் போர் விமானங்களை அனுப்ப முயற்சித்துள்ளது. 
அது ஒரு புறம் இருக்க, விமானம் 34,000 அடியில் இருந்து சடாரெனக் கீழிறங்கி 19,000 அடிக்குப் போய் மறுபடி மேலெழும்பி மேலும் கீழும் அலைபாய்ந்து பின்னர் 15,000 அடியில் நிலை கொண்டது. இந்த மாதிரி அலைபாய்ந்ததில் விமானத்தின் இறக்கைகள் பாதிப்புற்றிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்பை வைத்து எந்த மாதிரி அலைபாய்ந்திருக்கிறது என்பதை கணிக்க முடிந்திருக்கிறது.
அதாவது அனைத்து கான்ஸ்பிரசி தியரிகளும் வெறுமனே அர்த்தமற்ற கான்ஸ்பிரசிகள்தான் என்பது தெளிவாகிறது. 
இது நேதன்யாஹூவின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் அதிகரிக்க உதவும் என்பது பெருத்த சோகம்தான். ஆனால் அதற்காக அவர்தான் இதை அரங்கேற்றினார் என்று சொல்வது மடமை. சொல்லப்போனால் 2023 வரை அவர் செல்வாக்கு அடிமட்டத்தில்தான்  கிடந்தது.  அவருக்கெதிராக மக்கள் சாலைகளெங்கும் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர் பதவியையே சுப்ரீம் கோர்ட் பறிக்கும் நிலை எட்டி இருந்தது. சும்மா விட்டிருந்தால் வரலாற்றின் பக்கங்களில் இருந்து சுத்தமாக காணாமல் போயிருப்பார். அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் நடத்தியதில் தனது பிடியை இறுக்கிக்கொண்டார். அவர் மாதிரி ஒரு முரட்டுப் பிரதமர்தான் தற்போதைய தேவை என்று இஸ்ரேலி மக்களும் அமைதி காத்து நின்றார்கள். எனவே நேதன்யாஹூ இன்று அதிகார பலத்துடன் வலம் வருவதற்கு முஸ்லிம்கள் குற்றம் சுமத்த வேண்டியது ஹமாஸ்ஸைத்தான். 
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, என்னைப் பொருத்தவரை இந்த சம்பவம் இஸ்லாமாஃபோபியா, மன்னிக்கவும், இஸ்லாமாஃபியரின் இன்னொரு புதிய அத்தியாயத்தை துவக்க இருக்கிறது. flydubai நடந்தபின்னர் இஸ்ரேல் வரும் அனைத்து விமான சேவை பைலட்டுகளையும் முழுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப் போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது. இதையே அமெரிக்காவும் செய்யும். 2000 வரை விமான நிலையங்களெல்லாம் சும்மா பஸ் ஸ்டேண்டுகள் போலத்தான் உலகெங்கும் இயங்கி வந்தன. 9/11க்குப் பின் அவை அனைத்தும் கடும் பாதுகாப்பு சோதனைக்களங்களாக மாறின. அதன்பின் சுமார் ஐந்தாறு ஆண்டுகள் முஸ்லிம் பயணிகள் பெரும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஷாருக் கானே கூட நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அது போன்றதொரு புதிய தொல்லை முஸ்லிம் பைலட்டுகளுக்கு இனி காத்திருக்கிறது. மேற்குலகு முழுவதும் முஸ்லிம் பெயருள்ள பைலட்டுகளுக்கு பிரச்சினை ஏற்படும். இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற இதர நாடுகளும் முஸ்லிம் பைலட்டுகளுக்கு கெடுபிடி ஏற்படுத்துவார்கள். Targeted security checksகளுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுவார்கள். அவற்றையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடுகளாக இமாம்களும் இஸ்லாமிய சமாளிப்பாளர்களும் (apologists) பிம்பப்படுத்துவார்கள். உலகெங்கும் இஸ்லாமாஃபியர் அதிகரிக்க இந்த சம்பவம் உதவப் போகிறது.
வருத்தங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக