செவ்வாய், 2 ஜூன், 2026

அதிமுக தொண்டரின் விபரீத முடிவு… கண்ணீர் மல்க குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஈபிஎஸ்

 மின்னம்பலம் - Kavi  :  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறி  உயிரை மாய்த்துக்கொண்ட தொண்டரின் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நேரில் அஞ்சலி செலுத்தினார். 
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுகவில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவரது மனைவி முனீஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.


இந்த நிலையில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை, பிளவு ஆகியவற்றின் காரணமாக மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

முன்னதாக, இவர் வெளியிட்ட வீடியோவில், ‘அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகளை எல்லாம் பார்க்கும் போது என்னை போன்ற எளிய தொண்டர்கள் மனவேதனை அடைகிறார்கள். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும்.

என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒன்று சேர வேண்டும். அம்மா ஆட்சி அமைய வேண்டும்.

என்னுடன் அரசியலில் பயணித்த நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆன்மா சாந்தியடையும். அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாக ஆசைப்படுகிறேன் என்று உருக்கமாக பேசியிருந்தார்.

அதுபோன்று 5 தினங்களுக்கு முன் தவெக அரசை விமர்சித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில்,  எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து குதிரை பேரம் செய்தால் இதற்கான விளைவை சீக்கிரம் அனுபவிப்பீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார். 

இதைத்தொடர்ந்து மகேந்திரன் விபரீத முடிவு எடுத்த நிலையில் அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மகேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உங்கள் குடும்பத்துக்கான அத்தனை செலவையும் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளித்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில்,  “மகேந்திரனின் பெண் குழந்தை, வளர்ந்து, பள்ளிபடிப்பை தொடங்கி, கல்வி கற்று முடிக்கும் வரை ஆகும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும். அதே போல் கட்சி சார்பில் குடும்ப நலன் நிதியாக ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். நாங்கள் மனவேதனையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் என்னால் வேறு  எதுவும் சொல்ல முடியாது” என்று  கண் கலங்கினார்.

Photo of author
Kavi

கவி... இளங்கலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர். சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளில் தனித்த கண்ணோட்டத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து சளைக்காமல் எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக