திங்கள், 6 ஏப்ரல், 2026

சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ் (தந்தை, மகன்) கொலை வழக்கு! 9 போலீசாருக்கும் மரண தண்டனை

 தினமலர் :மதுரை: சாத்தான்குளத்தில் போலீஸ் ஸ்டேசனில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.


இதில், இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது போலீசார் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர்.

தண்டனை விதிப்பது குறித்த நிலைப்பாட்டை, தமிழக அரசு தரப்பில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து, ஏற்கனவே அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

அவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று (ஏப்ரல் 6) மாலை 5.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பும் இருக்க வேண்டும். காவல் நிலை மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது. இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.பென்னிக்ஸ் ஜெயராஜை இரக்கமின்றி கொன்றதை கொடூரமாக தான் கருத வேண்டும்.

பழிவாங்கும் நோக்கில் இருவரும் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.தந்தை, மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.

தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் கொடூரமாக தாக்கியதை எளிதாக கருத முடியாது. சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு உள்ளன.நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் தாக்கி உள்ளனர். 2 பேர் மீதும் எந்த குற்றவழக்கும் இல்லை. குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள். நன்கு படித்துள்ளனர். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது.

அரிதான வழக்கு
நீதிமன்றம் தலையிடாவிட்டால், தந்தை மகன் உடலுடன் உண்மையும் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும். அரசு அதிகாரிகளே விதிகளை மீறியுள்ளனர். இந்த கொலை வழக்கில் வேலியே பயிரை மேய்ந்துள்ளது. ஒரே நேரத்தில் தந்தை மகன் என்ற குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. அரிதினும் அரிதான வழக்கு. மரண தண்டனை தான் தர வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டி உள்ளது.

அபராதம்
ஆயுள் தண்டனை காவல்துறைக்கு அச்சம் தராது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தண்டனை தர வேண்டும். குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியிலான தண்டனை வழங்க வேண்டும். யார் அதிகமாக அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட முடியாது. அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9 போலீசாருக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை ரூ.1.04 கோடியாகும். இந்த தொகையை பென்னிக்ஸ் தாயாரிடம் வழங்க வேண்டும். என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக