வியாழன், 26 மார்ச், 2026

ஈரான் அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து பரிசீலிக்கிறது- ஈரானிய வெளிவிவகார அமைச்சர்!

  hirunews.lk  : மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படும் '15 அம்ச சமாதானத் திட்டத்தை' ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி உடனடியாக நிராகரிக்கவில்லை.
எனினும், அந்தத் திட்டம் குறித்த ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன், அவை ஒருசில இடங்களில் '15 அம்சத் திட்டம்' என அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.



இவ்வாறான யோசனைகள் பல்வேறு வடிவங்களில் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து ஈரான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அது நிச்சயமாக உயர்மட்ட அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளமை, தற்போதைக்கு அந்தத் திட்டத்தை ஈரான் முழுமையாக ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என்பதையே காட்டுகின்றது.

இதேவேளை, தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ள போதிலும், அமெரிக்கத் தரப்பு பல்வேறு இடைத்தரகர்கள் ஊடாகத் தொடர்ந்து பல செய்திகளை அனுப்பி வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக