zeenews.india.com RK Spark :டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா வெளியிட்டுள்ளார். நாளை வியாழக்கிழமை முதல் டெல்லியில் உள்ள எந்தவொரு பெட்ரோல் பங்கிலும், செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் வாகனத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லையென்றால், நீங்கள் எரிபொருள் நிரப்ப முடியாது. இதை சரிசெய்ய வாகன ஓட்டிகளுக்கு இன்று புதன்கிழமை ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நொய்டா, குர்கான், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 ரக தனியார் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 தரநிலையை பூர்த்தி செய்யாத வெளிமாநில வாகனங்கள் டெல்லி எல்லைக்குள் அனுமதிக்கப்படாது. மீறி உள்ளே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெட்ரோல் பங்குகளிலும், எல்லைகளிலும் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரக் கருவிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். வாகனங்களின் பிஎஸ் வகை மற்றும் பியூசி சான்றிதழ் ஆகியவை முறையாக சரிபார்க்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடுவோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே GRAP 3 மற்றும் 4-ன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் டெல்லியில் அமலில் உள்ளன.
பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்கு தடை தொடர்கிறது.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லாத பிஎஸ்-4 ரக நடுத்தர சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் டெல்லி-என்சிஆர் பகுதியில் இயங்க தடை நீடிக்கிறது.
அரசின் பிற நடவடிக்கைகள்
வாகன கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, மாசுபாட்டை குறைக்க பிற துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மின்சாரப் பேருந்துகள்: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த இதுவரை 3,427 மின்சார பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. 2026 டிசம்பருக்குள் 7,500 இ-பேருந்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் கண்காணிப்பு: மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, சுமார் ரூ. 9.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 280 ஆலைகளில் ஆன்லைன் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
குப்பை கிடங்குகள்: குப்பை கிடங்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை அழிக்கும் பணிகள் நாள் ஒன்றுக்கு 35,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 45 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற காடுகள் வளர்க்கப்படுகின்றன.
ஹீட்டர்கள் விநியோகம்: குளிர்காலத்தில் பாதுகாவலர்கள் வெப்பத்திற்காக விறகு அல்லது குப்பைகளை எரிப்பதை தடுக்க, 10,000 எலக்ட்ரிக் ஹீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. டீசல் ஜெனரேட்டர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் சாடல்
காற்று மாசு என்பது டெல்லி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு "நோய்" என்று குறிப்பிட்ட அமைச்சர் சிர்சா, இதற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காற்று மாசு பிரச்சனையில் மௌனம் சாதிப்பதாகவும் அவர் விமர்சித்தார். புதிய விதிமுறைகள் சிரமமாக இருந்தாலும், டெல்லியின் காற்றை சுத்தப்படுத்த இவை அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் உடனடியாக தங்கள் வாகனங்களுக்கான பியூசி சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக