ஞாயிறு, 21 டிசம்பர், 2025

மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் காலமானார்

ராதா மனோகர் :   இன்று இந்திய திரை உலகம் ஒரு மிக பெரிய ஆளுமையை "ஸ்ரீநிவாசன்" இழந்து விட்டது 
மறைந்த மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் விட்டு சென்ற இடத்தை நிச்சயமாக வேறு எவராலும் நிரப்ப முடியாது!
திரு ஸ்ரீநிவாசன் படங்களை பற்றி பேசும்போது அவரின் கதை வசனங்களை பற்றி பேசுவதா அவரின் நடிப்பை பற்றி பேசுவதா என்ற குழப்பம் நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்படும்.
மிக சாதாரண மக்களின் உள்ளத்தை உள்ளபடி தொட்டு பேசிய மகா மகா நடிகன் . அதை விட ஒரு கதை வசன மேதாவி!
அவரின் ஒவ்வொரு படங்களும் திரைப்பட பாடங்களாக பயில்வதற்கு உரியது.
சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வியலை வெறும் சோக காவியங்களுக்காக படைக்காமல் நகைச்சுவையோடு காட்சி படுத்துவது ஸ்ரீனிவாசனின் தனி சிறப்பு.
ஸ்ரீனிவாசனின் ஏராளமான படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.


உதாரணமாக அவரின் கதைவசனத்திலும் நடிப்பிலும் உருவான சன்மானத்துள்ளவர்க்கு சமாதானம் என்ற ஒரு படத்தை பற்றி மட்டும் சில வரிகள் கூறலாம் என்றெண்ணுகிறேன்.
அதன் கதாநாயகன் மோகன்லால். கதாநாயகி கார்த்திகா.
அற்புதமான கதை வசனம்.
அந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் அன்றாட வாழ்வில் நாம் காணும் சாதாரண மனிதர்கள்தான்.
சினிமாவுக்கான விசேஷ நிறங்கள் ஒன்றும் அந்த பாத்திரங்களுக்கு கிடையாது.
சாதாரண கதாபாத்திரங்களுக்குள் அப்படி என்ன சுவாரசியம் இருந்து விட போகிறது என்று  கருதும் வழக்கமான சினிமாக்காரர்களின் தலையில் குட்டி ஒரு பெரிய வகுப்பெடுத்த படம் அது.
அந்த மிக சிறந்த படத்தை தமிழில் இல்லம் என்ற பெயரில் எடுத்து கெடுத்தார்கள். 
அதில் நடித்த சிவகுமார் எப்படி ஒரு ஆழமான கதாபாத்திரத்தை நாசமாக்க முடியும் என்பதை செயல்முறையாக காட்டி இருந்தார்.
அந்த நுட்பம் எல்லாம் இன்றைய தமிழ் சினிமாக்காரர்களுக்கு  வரவே வராது!
(ஆனால் ஸ்ரீனிவாசன் கூட  தமிழ்நாட்டுக்கு நெருங்கிய  தொடர்பு உள்ளவர்தான்) 
ஸ்ரீனிவாசனின் நகைச்சுவை காட்சிகள் ஒருபோதும் பிறரை கேலி செய்து அல்லது பிறரை தாக்கி அதில் சிரிப்பு வரவழைக்கும்  காட்சிகளாக இருக்காது.
ஸ்ரீனிவாசனின் வசனங்களும் நடிப்பும் அந்த விதமான மலிவுபதிப்பு  சமாச்சாரங்கள் அல்ல!
யாருக்கும் நோக்காத ஒரு படிப்பினை மட்டுமே அதில் இருக்கும்.
எல்லாவற்றிலும் மேலாக அவரின் நடிப்பில் வெறும் வசனங்களை ஒப்புவிக்கும் தன்மை இருக்காது.
சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் உள்ள உணர்வுகளை சரியான அளவில்  வெளிப்படுத்தும் அவரின் ஆற்றல்  முக்கியமாக குறிப்பிட வேண்டிய  விடயம்.
அந்த காலத்து நடிப்பு மேதைகளான எம் ஆர் ராதா போன்றவர்களின்  ஏதோவரு சாயல் ஸ்ரீனிவாசனின் நடிப்பிலும் வசனத்திலும்  காணலாம். 
சினிமா மீது காதல் உள்ளவர்கள் நிச்சயமாக ஸ்ரீனிவாசனின் படங்ளை பார்க்கவேண்டும்!
திரு. ஸ்ரீனிவாசனின்  ஏராளமான திரைப்படங்களில் அந்த ஒப்பற்ற திரை மேதை  வாழ்கிறார்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக