![]() |
Arul Ezhilan : அந்த இரவில் மேயர் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!
முரசொலி மாறன் முன்னால் நின்று ரிக்கார்டரை நோண்டிக் கொண்டிருக்கும் ஆள் நான் தான்.
கலைஞர் கைது என்றால் எனக்கு பேஜர் காலம்தான் நினைவுக்கு வரும்.
விகடனில் சேர்ந்த புதிது, நள்ளிரவில் அசோகன் சார் என்னை அழைத்து ”கலைஞரை கைது செய்துட்டாங்க நீங்களும் போய் கவர் பண்ணிட்டு வாங்க” என்று அனுப்பினார்.
அது பேஜர் காலம் விகடன் அலுவலகத்தில் எனக்கொரு பேஜர் கொடுத்திருந்தார்கள்.
நான் அதை நான் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கலைஞரை கைது செய்து கொண்டு சென்ற இடமெல்லாம் அலைந்தேன். அரசினர் தோட்டத்துக்குள் CBCID அலுவலகம்
அந்த காம்பவுண்ட் சுவர் மேல் சிலர் பத்திரிகையாளர்கள் ஏற நானும் ஆர்வக்கோளாறில் ஒரே ஜம்பில் மதில் மேல் ஏறினேன். கொஞ்ச நேரத்தில் டி.ஆர். பாலு தன் வாகனத்தைக் கொண்டு கத்தியபடியே அந்த கேட்டின் மீது மோதி போலீசாருடன் தன் தலைவருக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தார். நிலமை மோசமான போது யார் அடித்தார்கள் என தெரியவில்லை லத்தியை வைத்து பின் பக்கம் அடித்ததில் நான் அந்த பக்கமாக குதித்தேன். காயம் எதுவும் இல்லை.ஆனால் அந்தக் களேபர்த்தில் அலுவலகத்தில் தந்த பேஜர் தொலைந்து விட்டது.
அந்த கைதின் நுட்பமே கலைஞர் குடும்பத்தை அலைக்கழிக்க விடுவதுதான். அதுதான் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம்.
கலைஞரை கைது செய்வது
அவரது மகன் ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
கலைஞர் ஒரு பக்கம்
முரசொலி மாறன் ஒரு பக்கம் என நாலா திசையிலும் கொண்டு சென்று அலைக்கழித்தார்கள்.
நான் வேப்பேரி காவல் நிலையம் போனேன் உண்மையில் அதைக் கண்டு நிலை குலைந்து போனேன்.
கலைஞரை விட சிந்தாந்தவாதி முரசொலி மாறன் அவரை அந்த காவல்நிலையத்தில் வைத்து தாக்கினார்கள். பின்னர் அவர் வெளியில் வந்த போது உடல் பலவீனம் காரணமாக அவரால் வேட்டியை சரியாக கட்ட முடியவில்லை. நான் சிறிது நேரம் அவரை பிடித்திருந்தேன் அவருக்கு வேட்டி கட்டி விட்டேன். இந்த விடியோ அப்போது சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்போதும் அந்த விடியோ சன் நியூஸ் தொலைக்காட்சி சேமிப்பகத்தில் இருக்கும்.இது நான் அவரை சின்னதாக வாக்குமூலம் பெற என் ரிக்கார்டரை சரி செய்து கொண்டிருந்த போது எடுத்த படம்.
அந்த இரவு யாரும் ஓடவில்லை
ஸ்டாலின் பெங்களூருவில் இருக்கும் தனது சகோதரி செல்வி வீட்டிற்கு சென்றிருந்தார். உடனே திரும்ப திட்டமிட்டார்.ஆனால், திமுக மூத்த தலைவர்கள் வேண்டாம் என்றதால் சென்னைக்கு வரவில்லை. அன்றைய காலச் சூழலில் ஜெயலலிதாவின் முதல் குறி சென்னை மேயராக இருந்த ஸ்டாலின்தான். தனது பதவிக்கு உறுத்தலாக அவர் சென்னைக்குள் இருப்பதாக ஜெயலலிதா கருதினார். அன்று ஸ்டாலின் அவர்கள் புத்திசாலித் தனமாக நடந்திருக்கா விட்டால் நிச்சயம் இன்று அவரால் முதல்வராகி இருக்க முடியாது. அவர் நீதிபதி முன்னால் சரணட் ஆனார். சரண்டர் ஆன ஸ்டாலின் அவர்களை நீதிபதி அசோக் குமார் பாராட்டி விட்டு ரிமாண்ட் செய்து சிறைக்கு அனுப்பினார்.
அன்று மேயர் ஸ்டாலின் அவர்கள் ஜெயலலிதாவின் போலீசிடம் சிக்கியிருந்தால் ஜெயலலிதா மற்றும் சசிகலா கும்பலால் சந்திரலேகாவுக்கும், கே.கே. எஸ்.எஸ் ஆருக்கும்,ஆடிட்டர் ராதாகிருஷ்ணனுக்கும் என்ன நடந்ததோ அதுதான் அவருக்கும் நடந்திருக்கும்....
அன்று மேயர் ஸ்டாலினை வேட்டையாட முடியாத ஜெயலலிதா, ஒருவர் இரண்டு அரசுப்பதவிகளில் இருக்க முடியாது எனச் சட்டம் கொண்டு வந்து அவரது மேயர் பதவியை பறித்தார். கலைஞர் கைது செய்யப்பட்ட போது அன்று மேயர் ஸ்டாலின் அவர்கள் சூழலை புரிந்து கொண்டு நீதிபதி முன்பு சரண்டர் ஆனதால் இன்று முதல்வராகவும் திமுக தலைவராகவும் நமக்கு கிடைத்திருக்கிறார். இதெல்லாம் திருட்டு லாட்டரி விக்கிறவனுக்கு தெரியுமா?
அன்று துடிப்போடு இருந்த ஊடகத்துறையும், நீதித்துறை மூலமும் போராடிய திமுக அதில் வென்றது. ஜெயலலிதாவுக்கு துணை போன பாத்திமா பீவி பதவியை விட்டு ஓடும் அளவுக்கு போராடியது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக