![]() |
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy :சத்தீஸ்கரில் வீட்டுப்பாடம் முடிக்காத நான்கு வயது மாணவனை ஆசிரியைகள் மரத்தில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் பகுதியில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் வாஹினி வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் திங்களன்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. அப்போது நர்சரி வகுப்பு ஆசிரியை காஜல் சாகு என்பவர் குழந்தைகளுக்கு அளித்த வீட்டுப்பாடத்தை சரிபார்த்தார். அப்போது அவரது வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் வீட்டு பாடங்களை முடிக்காதது கண்டு ஆத்திரம் அடைந்தார்.
இதனால் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவனை வெளியில் அனுப்பினார். மேலும் மாணவரின் உடையை களைந்து ஆசிரியை மற்றொரு ஆசிரியை உதவியோடு மாணவனை பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டார். நான்கு வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தில் தொங்கியதால் நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தான். ஆனால் சிறுவனின் அழுகையை கண்டு கொள்ளாத ஆசிரியைகள் அருகிலேயே நின்றனர்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்ற நிலையில் அந்த நபர் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வட்டார கல்வி அதிகாரி உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி அஜய் மிஸ்ரா இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஆசிரியைகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகமும் ஒப்புக் கொண்டுள்ளது. குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆசிரியைகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக