dinamalar :தினமலர் : ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 39 பேருடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், இரண்டு பேர் சிறுவர்கள்.இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன.
பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மீது நேருக்கு நேர் மோதி தீப்பற்றியது என விசாரணையில் தெரியவந்தது. இதில் பைக் ஓட்டி வந்த சிவக்குமார் என்ற வாலிபர், அதே இடத்தில் உயிரிழந்தார். பஸ் டிரைவர், பஸ்சில் இருந்து குதித்து கண்ணாடியை உடைத்து மற்ற பயணிகளை காப்பாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து கருகி விட்டன. அவற்றை டி.என்.ஏ., சோதனை மூலம் அடையாளம் காண ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பஸ் தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஜனாதிபதி முர்மு இரங்கல்
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் பஸ்சில் தீப்பற்றியதில் உயிர் இழப்புகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டு உள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக