![]() |
சிவா சின்னப்பொடி : பிரான்ஸை உலுக்கும் "இலவச தள்ளுவண்டி " போராட்டம் ! கதிகலங்கி நிற்கும் பல்பொருள் அங்காடிகள் !
பணம் தேவையில்லை, பொருட்களை அள்ளிக்கொண்டு செல்லுங்கள்! என்பதுதான் பிரான்ஸை இன்று அதிர வைத்திருக்கும் "இலவச தள்ளுவண்டி " போராட்டம்! நாடு தழுவிய மக்கள் எழுச்சியால் பெரும் நிறுவனங்கள் பீதியில் உறைந்துள்ளன.
நாடு தழுவிய "அனைத்தையும் முடக்குவோம்" என்ற மாபெரும் மக்கள் போராட்டம் இன்று வெடித்துள்ளது. ஆனால், வழக்கமான சாலை மறியல், வேலைநிறுத்தங்களைத் தாண்டி, ஒட்டுமொத்த பிரான்சின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஒரு நூதனப் போராட்டம். அதன் பெயர்: " இலவச தள்ளுவண்டி போராட்டம் " (Opération Chariot Gratuit).
ஆயிரக்கணக்கான மக்கள் பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழைவது தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தள்ளு வண்டி முழுவதும் நிரப்புவது . பின்னர், பணம் செலுத்தும் கவுண்டர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், ஒரு சென்ட் கூடப் பணம் செலுத்தாமல், தைரியமாக வெளியேறுவது !
இதுதான் போராட்டக்காரர்களின் திட்டம். "இது திருட்டல்ல, எங்கள் உரிமைக்கான கீழ்ப்படியாமைப் போர்" என அவர்கள் முழங்குகின்றனர். மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக உருவெடுத்துள்ள இந்தப் போராட்டம், பிரான்சின் பெரும் பல்பொருள் அங்காடிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
பிரான்சின் புகழ்பெற்ற 'இன்டெர்மார்சே' குழுமத்தின் தலைவர் தியரி கோட்டிலார்ட், தனது அச்சத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். "பல்பொருள் அங்காடிகளுக்குள் புகுந்து பணம் தராமல் வெளியேறுங்கள் என்று கூறுவது பகல் கொள்ளைக்குச் சமம்! இது நாகரீகமல்ல. இதனை எதிர்கொள்ள நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்று அவர் கொந்தளித்துள்ளார்.
ஒருபக்கம் மக்கள் சக்தி திரள, மறுபக்கம் அரசு தன் இரும்புக் கரத்தை ஓங்கியுள்ளது. "எந்தவிதமான வன்முறைக்கோ, சட்டத்தை மீறும் செயல்களுக்கோ இங்கு இடமில்லை. எல்லை மீறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்," என உள்துறை அமைச்சர் புருனோ ரிட்டாய்லோ கடுமையாக எச்சரித்துள்ளார்.
தலைமை இல்லாத இந்த மக்கள் எழுச்சி, சுங்கச்சாவடிகளை உடைப்பதிலிருந்து, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை நொறுக்குவது வரை பல வடிவங்களில் வெடித்துள்ளது.
இன்று பிரான்சில் பதற்றம் உச்சத்தில் உள்ளது. மக்களின் தள்ளுவண்டிகள் இலவசமாகப் பொருட்களை அள்ளிச் செல்லுமா? அல்லது அரசின் தடியடிகள் அதைத் தடுக்குமா? ஒட்டுமொத்த தேசமும் பெரும் எதிர்பார்ப்புடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
Siva Sinnapodi பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக