மின்னம்பலம் -Mathi : மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, தமது ஆதரவாளர்களுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்கி உள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார் மல்லை சத்யா.
மதிமுக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் மல்லை சத்யா. மதிமுகவின் முதன்மை செயலாளரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மதிமுக கட்சி கூட்டங்களிலேயே இந்த மோதல் வெடித்திருந்தது. வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
ஆனால் இந்த சமாதான முயற்சிகள் நீடிக்கவில்லை. இதனால் மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் மல்லை சத்யா தமது ஆதரவாளர்களுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
மூத்த திராவிடர் இயக்க தலைவர்களில் ஒருவரான திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் மூத்த தலைவர்களான புலவர் செவந்தியப்பன், பொடா அழகு சுந்தரம், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டோருடன் இணைந்து புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார் மல்லை சத்யா.
இந்த புதிய கட்சியின் பெயர் நவம்பர் 20-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக