tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கினை முடித்து வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பதாகவும், பொறுப்பான பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சைவம், வைணவம் சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து இருந்தது. இந்த வழக்கை முதலில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் புகார்தாரர்கள் அனைவரிடமும் இதற்கான ஒப்புகை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில் உயர் பதவியில் இருக்கும் பொன்முடி இதுபோன்ற கருத்துக்கள் பேசுவதை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் கூறினார். மேலும், காவல்துறை இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோல் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக