செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

மன்னார் காற்றாலைக்கு கடும் எதிர்ப்பு - நேற்றிரவு உருவான பதற்ற நிலைக்கு இன்று நீதிமன்றத்தில் இணக்கத் தீர்வு.

 ஹிருனியஸ் : மக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நாளை விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
 ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 
 காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். 


 
அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு நாளை காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். 
 
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் மன்னாருக்குப் பிரசாரத்துக்கு சென்றிருந்த அநுரகுமார திஸாநாயக்க, பிரதேச மக்களின் அனுமதியும், இணக்கமும் இல்லாமல் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக