வியாழன், 10 ஜூலை, 2025

மாத்தையாவான மல்லை சத்யா- வைகோ பகிரங்கப் பேட்டி! சத்யா ஆவேச பதில்!

 மின்னம்பலம் : பிரபாகரனுக்கு எதிராக மாத்தையா எவ்வாறு துரோகம் செய்தாரோ, அதேபோல தனக்கு எதிராக மல்லை சத்யா துரோகம் செய்திருக்கிறார் என்ற தொனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடுத்த பேட்டி அக் கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. vaiko Mallai Sathya
கடந்த ஜூலை 3 ஆம் தேதி மின்னம்பலத்தில், ’திமுகவோடு தொடர்பு… எனக்கு எதிராக லாபி… வெளியே போங்க… மல்லை சத்யாவை எச்சரித்த வைகோ’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் ஜூன் 29ஆம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, பொதுச் செயலாளர் வைகோ நேருக்கு நேராக கடுமையாக விமர்சித்து பேசியதை பதிவு செய்திருந்தோம்.



இந்த நிலையில், மதிமுகவின் அண்ணா பிறந்தநாள் மாநாட்டுக்கான சென்னை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் ஜூலை 10-ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மல்லை சத்யா குறித்து துரோகி என வைகோ பேசியிருக்கும் பேட்டி வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்ல பூந்தமல்லியில் நடக்கும் சென்னை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்திற்கான வரவேற்பு பதாகைகள், விளம்பரங்களில் மல்லை சத்யா பெயரோ படமோ இருக்கக் கூடாது என மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மல்லை சத்யாவின் பெயர் எந்த இடத்திலும் இல்லை.

இந்த நிலையில் தான் வைகோ அளித்த பேட்டியில், “மல்லை சத்யா சமீபகாலமாக கட்சியின் எந்த கூட்டங்களில் கலந்து கொண்டாலும் இறுக்கமான முகத்தோடு தான் இருக்கிறார். சமீபத்தில் அவர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட போது கூட, மாமல்லபுரம் தமிழ் சங்க தலைவராகத்தான் செனறாரே ஒழிய மதிமுக காரராக செல்லவில்லை. என்னிடம் சொல்லவும் இல்லை. அங்கே அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் என் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை.

விடுதலைப் புலிகள் வரலாற்றில் மாத்தையாவைவிட பிரபாகரனுக்கு விசுவாசமாக யாரேனும் ஒருவர் இருந்தது உண்டா? ஈழம் அமைந்தால் மாத்தையாவைத்தான் தலைமை அமைச்சராக – முதலமைச்சராக ஆக்குவேன் என என்கிட்டேயே பிரபாகரன் சொன்னார்.

அந்த பிரபாகரனை கொலை செய்வதற்கே, இந்திய ரா உளவுத்துறை அமைப்பு கையில் மாத்தையாவையும் கிருபனையும் மற்றவர்களையும் கைப்பற்றிக் கொண்டது. அந்த திட்டத்துடன்தான் அவர்கள் இருந்தனர். அது பொட்டம்மானால் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பேரையும் வைத்து பிரபாகரன் கூட்டம் நடத்தினார். அதில், தலைவர் பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்ற அந்த சதித் திட்டத்துக்கு நான் உடன்பட்டது உண்மைதான் என்று மாத்தையா அழுதுகொண்டே சொன்னார். அப்போது பிரபாகரன், என் வாழ்க்கையில் நான் ஒரு சொட்டு கண்ணீர் விட்டது கிடையாது.. உன்னை என் பிள்ளை மாதிரி வெச்சிருந்தேன்டா… உன்னையைத்தான் முதலமைச்சராக்குவேன் என சொல்லி இருந்தேன்டா.. நீ எப்படி இப்படி துரோகம் செஞ்ச? என கேட்டார். ஆனால், அவர் அப்படி பாடுபட்டார்.. இப்படி பாடுபட்டார்.. இந்திய சிப்பாய்களை ஒப்படைக்க மாத்தையாவைத்தான் அனுப்பி வைத்தார் பிரபாகரன்.. புலிகளின் பத்திரிகை பொறுப்பை கூட அவரிடம் கொடுத்திருந்தார்கள்.. என முன்பு அப்படி செஞ்சார் இப்படி செஞ்சார் என சொன்னால் எப்படி ஏற்க முடியும்? ஒரு காலத்தில் நன்றாக பணியாற்றிவிட்டு பின்னர் துரோகம் செய்வது என்பது சரித்திரத்தில் நிறைய பார்த்திருக்கிறேன் நான்.. அதை பற்றி எல்லாம் நான் இப்போது விரிவாக பேச விரும்பவில்லை.” என்று வைகோ சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து மல்லை சத்யா என்ன சொல்கிறார்?
அவரிடமே அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். பதில் சொல்வதைத் தவிர்த்தவரிடம், “உங்களது தலைவரே உங்களை துரோகி என்று பொதுவெளியில் சொல்லிவிட்டார். இனியும் பதில் சொல்லாமல் இருக்கப் போகிறீர்களா? என்ன பதில் சொல்கிறீர்கள்?”: என்று கேட்டதற்கு,

“நான் மிகவும் காயம்பட்டிருக்கிறேன். ஜூன் மாதம் நான் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றபோது கலந்து கொண்ட அத்தனை நிகழ்வுகளிலும் பொதுச்செயலாளர் வைகோவின் பெயரைச் சொல்லி அவருடைய தம்பியாகத்தான் வந்திருக்கிறேன் என்றுதான் பேசினேன். ஈழத் தமிழர்களுக்கான தனி நாட்டுக்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் என்ற வைகோ அவர்களின் கோரிக்கையைத்தான் அங்கு எதிரொலித்தேன்.

இந்த நிலையில் தான் இப்படிப்பட்ட அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது. என்னுடைய நிலைப்பாட்டை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவேன்” என்றார் மல்லை சத்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக