tamil.oneindia.com - Yogeshwaran Moorthi : சென்னை: மல்லை சத்யாவை காரணமாக வைத்து, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகப் போவதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதிமுக பிரமுகர்கள் சிலர் திமுகவில் இணைக்கப்பட்ட போது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கான முன்னோட்டமாக பார்ப்பதாக கூறிய பத்திரிகையாளர் மணி, வாரிசு அரசியல் காரணமாக மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகியோருக்கு இடையில் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக குரல்கள் எழுந்துள்ளன.
அல்லது மதிமுகவை திமுக விலக்கி வைக்கப் போகிறது. ஏற்கனவே 2021 தேர்தலில் பல்லடன் தொகுதியில் போட்டியிட்ட முத்து ரத்தினம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்க்கப்பட்டார். அப்போதே திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. 3 வாரத்திற்கு பின் மல்லை சத்யா விவகாரம் வெளியாகி இருக்கிறது. மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தப்பட்டிருக்கிறது.
வைகோ மீது துரோகி பட்டம்
இதனை பார்க்கும் போது நகைச்சுவையாக உள்ளது. ஏனென்றால் 1992ல் வைகோவிற்கு துரோகி பட்டம் சுமத்தி கருணாநிதி வெளியேற்றினார். இதனால் மதிமுக உதயமானது. எதற்காக வைகோ மீது துரோகி பட்டம் சுமத்தப்பட்டதோ, அதற்காகவே மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தப்பட்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ வந்துவிடுவார் என்று வெளியேற்றினார்.
துரை வைகோ பங்களிப்பு என்ன?
இன்று துரை வைகோவை கேள்வி கேட்பதால், மல்லை சத்யா மீது துரோகி பட்டத்தை சுமத்துகிறார்கள். சரியாக 25 ஆண்டுகளுக்கு பின் மதிமுகவில் வைகோவின் மகன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். மதிமுக குடும்பக் கட்சியாக மாறி வருகிறது. மதிமுகவில் துரை வைகோவின் பங்களிப்பு என்ன? ஸ்டாலினுக்கு பின் 50 ஆண்டுகால அரசியல் பணி இருக்கிறது.
பாஜகவுடன் துரை வைகோ சகவாசம்
ஆனால் துரை வைகோ மதிமுகவுக்கு என்ன தியாகம் செய்திருக்கிறார்? ஸ்டாலின் கடந்த 6 ஆண்டுகளாக கூட்டணியை கன்னியமாக நடத்தி வருகிறார். எந்த கூட்டணி கட்சியில் இருந்தும் நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கவில்லை. துரை வைகோ பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் வந்துள்ளன.
மத்திய அமைச்சர் பதவி
மதிமுக வெங்கய்யா நாயுடுவுடன் பேசி வருகிறது. துரை வைகோவிற்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. துரை வைகோவின் வேறு சில நடவடிக்கைகளும் திமுக தலைமைக்கு வந்துள்ளது. துரை வைகோ பாஜக அரசுடன் இணைந்து, அமைச்சராக போகிறார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது.
திமுக எடுத்த முடிவு
இதனால் எனக்கு கிடைத்த தகவலின்படி, 2001ல் கருணாநிதியும், 2011ல் ஜெயலலிதாவும் எப்படி மதிமுகவை வெளியேற்றினார்களோ, அதேபோல் 2026ல் மீண்டும் திமுக வெளியேற்ற உள்ளது. அப்படிதான் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். மதிமுகவில் இருந்து நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டதோ, அதனை வார்னிங்காக பார்க்க வேண்டும்.
மதிமுகவுக்கு கொடுத்த மெசேஜ்
கூட்டணி கட்சியில் இருந்து யாரை சேர்த்தாலும், சிக்கலை உருவாக்கிவிடும் என்பதை ஸ்டாலின் அறிந்தவர். முத்துரத்தினம் திமுகவில் இணைக்கப்பட்ட புகைப்படம் வந்தபோதே அதிர்ச்சியாக இருந்தது. மதிமுக கூடுதல் தொகுதி கேட்பது பிரச்சனையே இல்லை. அதனால் மதிமுகவுக்கு ஸ்டாலின் ஒரு மெசேஜ் கொடுத்துள்ளார். இவர்களின் கதை முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
துரை வைகோ செயல்பாடுகள்
அதன் கடைசி முயற்சியாகதான் ஸ்டாலினை அண்ணா அறிவாலயம் சென்று வைகோ சந்தித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதே துரை வைகோவின் செயல்பாடுகள் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரை வெல்ல வைத்தது கேஎன் நேரு தான். ஆனாலும் துரை வைகோவின் பேச்சுகள் சரியில்லை.
வைகோவின் விருப்பம்
திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று வைகோ விரும்புகிறார். ஸ்டாலின் வெளியேற்றப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. திமுகவுக்கு எதிராக போராட்டம் கூட நடத்தவில்லை என்று வைகோ கூறுவது அவமானமாக இல்லையா? வைகோ செய்த கூட்டணி தவறுகள் அனைத்தையும் மன்னிக்கலாம். ஆனால் மகனை கொண்டு வந்ததை மன்னிக்க முடியுமா? இது என்ன மன்னராட்சியா? கட்சியில் ஆள் கிடையாதா?
மதிமுக வலிமை
பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதால்தான், ஸ்டாலின் மதிமுகவை ஓரம்கட்ட தொடங்கினார். மகனுக்கு மத்திய அமைச்சர் ஆசை வந்துவிட்டது. அதனை வைகோவால் தடுக்க முடியுமா? மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றால், அதனை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு மதிமுக தலைமைக்கு வலிமை இருக்கிறதா?
எத்தனை தொகுதிகள்?
அதேபோல் தமிழ்நாட்டில் திமுக இனி மதிமுகவை மரியாதையுடன் நடத்தாது. 2026ல் மீண்டும் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் கிடைக்காது. 4 அல்லது 3 தொகுதிகள் தான் கிடைக்கும். மதிமுக நிர்வாகிகளை ஸ்டாலினே சேர்க்கிறார் என்றால், அது ஸ்டாலின் எடுத்திருக்கும் தெளிவான முடிவு. வைகோ விவகாரத்தில் ஸ்டாலின் நிச்சயம் எதையோ கண்டு உணர்ந்திருப்பதால், முடிவை எடுத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக