ஞாயிறு, 27 ஜூலை, 2025

ஊடக துறை இன்று வெற்று கூச்சல், பரபரப்பு பொய்கள் நாடகத்தன்மை.. சிதைந்து வருகிறது.

May be a graphic of text

 Vasu Sumathi   :  எங்கும் பரபரப்பு - எதிலும் பரபரப்பு: தமிழ்நாட்டில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி... ஒரு அலசல். (கொஞ்சம் பெரிய பதிவுதான்)
தமிழ்நாட்டில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறை ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக காட்சி ஊடகங்களிலும், சுய-பிரகடனப்படுத்திக் கொள்ளும் யூடியூப்"பத்திரிகையாளர்கள்" மத்தியிலும் பரபரப்பு என்பது அன்றாட கதையாகிவிட்டது. ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்பட்ட துறை இன்று வெற்று கூச்சல், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் நாடகத்தன்மை மிக்க கதையாக்கத்தால் வேகமாக சிதைந்து வருகிறது.


பத்திரிகைகளின் அடிப்படைக் கொள்கைகளான உண்மைதன்மை, பொறுப்புணர்வு மற்றும் அறிவார்ந்த  விவாதம் ஆகியவை டிஆர்பி (TRP) மற்றும் வைரல் பார்வைகளுக்கான ஒரு போட்டியில் பலியாகிவிட்டன. இந்தப் போட்டியில் உண்மைகள், சொல்பவருக்கு தர்மசங்கடத்தை தராவிட்டால் மட்டுமே சொல்லப்படும், துல்லியம்  புறக்கணிக்கப்படும். விளைவு? நம்பகத்தன்மை இறந்தே போய்விட்டது.
"பிரேக்கிங் நியூஸ்" என்ற நவீன நாடகம்
இப்போதெல்லாம் தமிழ் செய்தி சேனல்களில், "பிரேக்கிங் நியூஸ்" என்பது மிக மிக சாதாரணமான - அற்பமான செய்திகளுக்கும் கூட - நிரந்தர அம்சமாகிவிட்டது. இதன் நோக்கம் ஒரு பரபரப்பான நிலையை உருவாக்குவது மட்டுமே. உற்று பார்த்தால் பெரும்பாலும் யூகங்கள் அல்லது நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களின் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். 
அதேபோல் நிருபர்கள் செய்தி உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதே இல்லை – ஏனென்றால் அவர்களின் வேலை செய்தி பரப்புவது அல்ல, ஒரு கேமரா ஒரு மைக் வைத்துக்கொண்டு பரபரப்பை தூண்டுவது மட்டுமே.
செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் செய்திகளை வழங்குவதை விட நடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். மூச்சுவிடாமல் கத்துவது, ஆக்ரோஷமான வெளிப்பாடு, எடக்கு மடக்கான கேள்விகள்... இதன் மூலம் தான் முன்னமே திட்டமிட்ட முடிவுக்கு நேயர்களின் எண்ணங்களை கடத்துவது. 
இது பட்டவர்த்தனமான நடிப்பாக இருந்தாலும் அதற்கு துளி கூட வெட்கமே படுவதில்லை. மொத்தத்தில், பார்வையாளர்களை பொது மக்களாகக் கருதாமல், அதிர்ச்சி மற்றும் கண்கவர் காட்சிகளின் நுகர்வோராக மாற்றுவதே அவர்கள் நோக்கம்.
யூடியூபர்கள்: நவீன யுகத்தின் கழுகுகள்
இந்தக் குழப்பங்களையெல்லாம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவர்களில் சிலர், முதிர்ச்சி பெறாத யூடியூபர்கள் (எல்லோரும் அல்ல). இவர்கள் சர்வ சாதாரணமாக சதி கோட்பாடுகளையும் தனிநபர் தாக்குதல்களையும் "ஆழமான விசாரணை" என்று போர்வையில் கடத்திவிடுகிறார்கள். நீட்டி முழக்கும் பேச்சுக்கள், வெட்டி ஒட்டிய காட்சிகள், எந்த சரிபார்ப்பும் இல்லாத செய்திகள், மற்றும் சம்பந்தமே இல்லாத வாட்ஸாப் கசிவுகளை கோர்த்து, ஒரு நம்பகத்தன்மை கொண்டதாகத் தோன்றும் போலி கருத்துருவாக்கத்தை செய்கிறார்கள்.  
அரசியல், வணிக அல்லது சாதி லாபிகளால் ஆதரிக்கப்படும் இவர்களில் பலர், நிருபர்கள் என்ற அடையாளத்தை மறந்து, கூலிப்படையினராகவே மாறிவிடுகிறார்கள்.
இந்த 'செல்வாக்கு செலுத்துபவர்கள்' நடந்த உண்மை கதைகளை வெளியிடுவதில்லை – அவர்களே கதைகளை உருவாக்கி, அதை மக்கள் மன்றத்திற்கு எடுத்து சென்று, அவர்களே வக்கீலாக வாதாடி, அவர்களே நீதிபதியாக தீர்ப்பு எழுதி, மரணதண்டனை விதித்து அதை தானே நிறைவேற்றியும் விடுகிறார்கள்.
பத்திரிகை போர்வையில் மிரட்டல்
இன்று பல ஊடகச் செயல்பாட்டாளர்கள் பொது மக்கள் சார்பாக செயல்படாமல், அரசியல் பிரிவுகள் அல்லது சுயநலக் குழுக்களுக்காக செயல்படும் மிரட்டல்காரர்களாகவும், தரகர்களாகவும் செயல்படுகிறார்கள். சாதகமான செய்திகள் பணத்திற்காக நேரிடையாக விற்கப்படுகின்றன; அதிலும் அவதூறு செய்திகள் என்றால், அதிக விலை கொடுப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன. ஒரு சில பத்திரிகையாளர்கள், ஒரு சில சந்தர்ப்பங்களில், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலாக மாறிவருவது இப்போது விதிவிலக்கல்ல, விதியாகவே ஆகிவிட்டது.
விசாரணைகளையும் அரசு துறைகளையும் பலவீனப்படுத்துதல்
ஊடகங்கள் புரிந்துகொள்ளத் தவறும் அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கும் ஒரு உண்மை -
அப்போது நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளுக்கும், அரசு நிறுவனங்களின் நேர்மைக்கும், இவர்கள் அள்ளி தெளிக்கும் அவதூறுகள் பின்னாளில் சரி செய்ய இயலா பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று.
ஒரு பரபரப்பான குற்றம் நடந்தவுடன், ஊடக நிறுவனங்களும் யூடியூபர்களும் களத்தில் குதிக்கின்றனர். விசாரணைகளுக்கு உதவுவதற்காக அல்ல, பொதுவெளியில் தான்தோன்றித்தனமாக அவர்கள் ஒரு தனி விசாரணையை நடத்துவதற்கே. காவல்துறை ஆதாரங்களைச் சேகரிப்பதற்கு முன்பே, சாட்சிகளை விசாரிக்கும் முன்பே, இந்த ஊடகங்கள் முந்திக்கொண்டு அவர்களாகவே உள்நோக்கங்கள் சிலவற்றை கற்பித்து, சந்தேக நபர்களை அடையாளம் காட்டி, தீர்ப்புகளையும் வழங்கி விடுகின்றன.
இந்த தேவையில்லா தலையீடு பல நேரங்களில் சட்டத்தின் நியாயமான செயல்முறையைச் சீர்குலைக்கிறது. சாட்சிகள் பேசத் தயங்குகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊடக சார்பு நிலையைப் பொருத்து அரக்கர்களாகவோ, புனிதர்களாகவோ சித்தரிக்கப்படுகிறார்கள். 
இதுனால் புலனாய்வாளர்கள் மீது பொது அழுத்தம் அதிகரிக்கிறது – ஊடகங்களின் அகோர பசியைத் தணிக்க, பெரும்பாலும் அவசரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆதாரங்கள் கசிகின்றன. விசாரணைக்கான வழிகள் சிதைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் நீதிமன்றத்தில் அந்த வழக்கு தோற்றால், அதே ஊடகங்கள்  புலனாய்வாளர்களின் தோல்வி இது என்று குறை கூறுகின்றன.
காவல்துறை, நீதித்துறை மற்றும் உளவு அமைப்புகள், தடையில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்போதுதான் சிறப்பாக இயங்கும். ஆனால் இன்று தினம் தினம் ஸ்டுடியோ அறைகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து வரும் கதைகளால் அவை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவு துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல – ஆபத்தானதும் கூட. 
மனக்கிளர்ச்சி இயந்திரம்
ஒவ்வொரு நாளும், பொதுமக்களின் முன் ஒரு புதிய வில்லனும், ஒரு ஊழலும் திணிக்கப்படுகிறது. கோபம் என்பது  வழக்கமாகிறது, பகுத்தறிவு முற்றிலும் மூழ்கடிக்கப்படுகிறது, மாற்றுக்கருத்து உண்மை என சித்தரிக்கப்படுகிறது. இப்போது தகவலறிந்த குடிமகன் அறிதாகி விடுகிறார், அவருக்குப் பதில் ஒரு கோபமானவர், தவறாக வழிநடத்தப்படுபவர், எளிதில் ஆட்டுவிக்கப்படுபவர், சுருக்கமாக சொன்னால், ஒரு "தூண்டப்பட்ட பார்வையாளர்" – ஆட்ட களத்திற்கு நடுவே தள்ளப்படுகிறார்.
சீர்திருத்தத்திற்கான அழைப்பு
பத்திரிகை சுதந்திரம் நிச்சயம் வேண்டும். ஆனால் பொறுப்புணர்வு இல்லாத சுதந்திரம் அராஜகத்திற்கு வழி வகுக்கும். ஊடக உரிமையாளர்கள், ஒரு பொறுப்பான சமூகத்தை உருவாக்குகிறோமா அல்லது அதை அழித்துக் கொண்டிருக்கிறோமா என்று தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எப்போதெல்லாம் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் தலையிட வேண்டும்,  ஒழுங்குமுறை அமைப்புகளும் கடுமையாக செயல்பட வேண்டும்.
எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, பொதுமக்களாகிய நாம் இதை பார்த்துக்கொண்டு மௌனம் காக்க கூடாது. சரியான கேள்விகளை திருப்பி கேட்கவும், உண்மைதன்மையை சரிபார்க்கவும், பத்திரிகை எனும் போர்வையில் நடக்கும் நாடகத்தை நிராகரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
அச்சுறுத்தும் அதிகாரத்திடம் உண்மையை எடுத்துரைப்பதே பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று தமிழ்நாட்டில், அது பெரும்பாலும் அதிகாரத்தின் கூடுதல் கரமாக, திரித்தல் மற்றும் அச்சுறுத்துதலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை.  
இதை கட்டுப்படுத்தாது விட்டால், நாம் பல நல்ல அதிகாரிகளையும், நேர்மையான நிறுவனங்களையும், மக்கள் நம்பிக்கையையும் இழப்பதுடன் — ஒரு நாள் ஜனநாயகத்தையே இழக்க நேரிடும். 
உங்கள் கருத்தை சொல்லலாமே 👇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக