திங்கள், 21 ஜூலை, 2025

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை.. புதிய வீடியோ - பொதுமக்களை அலர்ட் செய்த போலீஸ்

  tamil.oneindia.com - Mani Singh S  : சென்னை: திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். 
8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் குற்றவாளி பிடிபடவில்லை. 
இந்த நிலையில் சந்தேகப்படும் நபரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். 
மேலும் சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு திருவள்ளூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து சிறுமி ஒருவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது திடீரென சிறுமியின் வாயை பொத்தி காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றார்.
tiruvallur-minor-girl-assault-case-police-release-new-photos-of-suspect-issue-appeal

அருகில் உள்ள மாந்தோப்பு அருகே தூக்கி சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த நபர் செல்போனில் பேசவே, அந்த நேரம் பார்த்து சிறுமி அந்த நபரிடம் இருந்து தப்பி சென்றார். வீட்டுக்கு வந்த சிறுமி இதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
8 தனிப்படைகள்

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சிறுமியை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதற்கிடையே சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடினர். முன்னதாக சிறுமியை அந்த நபர் தூக்கி செல்லும் வீடியோ பதிவாகியிருந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்த நபரை போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளியை விரைவில் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள சந்தேக நபர் ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஆவார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9952060948 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். pic.twitter.com/Xu2AGmc7EC
    — Thiruvallur District Police (@TNTVLRPOLICE) July 20, 2025

இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் சென்னை மின்சார ரயிலில் சிறுமியை வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் ஒன்றை எடுத்தனர். அந்த புகைப்படத்தை பதிவிட்டு போலீசார் சந்தேக நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம், வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலிய வன்கொடுமை வழக்கில் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் வீடியோவை திருவள்ளூர் மாவட்ட போலீசார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்கள். அதில், "சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்று கூறியுள்ளனர்.

மேலும் எக்ஸ் தளத்தில் திருவள்ளூர் போலீசார் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதில் போலீசார் கூறியிருப்பதாவது:-"இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள சந்தேக நபர் ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஆவார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9952060948 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக