திங்கள், 30 ஜூன், 2025

சிவகங்கை அஜித்குமார் மரணம்.. காட்டுமிராண்டித்தன நடவடிக்கை.. போலீசாரை கைது செய்க.. சண்முகம் ஆவேசம்!

 tamil.oneindia.com   -Yogeshwaran Moorthi  : சென்னை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர், அந்த இளைஞரை அடித்தே கொன்றுள்ளனர். 
காவல்துறையினர் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோயிலுக்கு காரில் வந்துள்ளார்.

காரை கோயிலின் தற்காலிக பணியாளரான அஜித் குமாரிடம் பார்க்கிங் செய்ய கூறியுள்ளார். அதற்கு அஜித் குமாருக்கு கார் ஓட்டத் தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்திருக்கிறார்.

கோயிலுக்குச் சென்று திரும்பிய சிவகாமியும் அவரது மகளும் திரும்புவும் காரை எடுத்த போது காரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை என்று அஜித் அவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அஜித் குமார் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், அவர்கள் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
திட்டவட்டமாக கூறிய அஜித் குமார்

இந்த புகாரின் பேரில் காளிகோயிலின் தற்காலிக ஊழியர் அஜித் குமாரை தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, தங்களது வாகனத்தில் வைத்தே சுற்றியுள்ளனர். நகை மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் சரமாரியாக ஆறு காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
ஆட்டோவிலேயே உயிரிழந்த அஜித்

பிறகு, மடப்புரம் காளி கோயிலுக்கு பின்புறம் ஆட்டோவில் அழைத்துச் சென்று அங்கேயும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோவிலேயே அஜித் குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அஜித் குமாரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

Recommended For You
திருப்புவனம் கஸ்டடி மரணம்:
சிபிஎம் கண்டனம்

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அஜித் குமாரின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎம் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களை விசாரியுங்கள்

இதுகுறித்து சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ சண்முகம், அஜித் குமார் மரணத்திற்கு காரணமாக இருந்த காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அஜித் குமார் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இழப்பீடு கொடுக்க வலியுறுத்தல்

அஜித்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. அதேபோல் இனிமேல் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிபிஎம் கட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக