புதன், 30 ஏப்ரல், 2025

திமுகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றம் : தேர்தலை எதிர்கொள்ள முக்கிய வியூகம்!

 tamil.samayam.com  - எழிலரசன்.டி  ; சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சி ரீதியாக முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது திமுக. அந்த வகையில் கட்சி அளவிலான ஒன்றியங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வியூக வகுப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளும் திமுக கூட்டணியில் எந்தவித சலசலப்பு இல்லாததால், இந்த கூட்டணி அப்படியே நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என அதிமுகவும் பாஜகவும் இப்போதே கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து வலுவான கூட்டணியாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தவெக ஆகியவை தனித்து களமிறங்குகின்றன. இதனால் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியான திமுக தற்போதே கட்சி அளவில் முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியாக ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளடங்கிய திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசித்து முடிவுகள் எடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.

ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரையின் படி ஒவ்வொரு சீர்த்திருத்தமாக அமலாகி வருகிறது. ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் பதவி என பிரிக்கப்பட்டு வருகிறது. அது தற்போது நகரம், ஒன்றியம் அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது கட்சி ரீதியாக இரண்டு ஒன்றியங்களாக இருப்பவை ஊராட்சிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று மற்றும் நான்கு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தஞ்சை, அரியலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒன்றியக் கழகங்கள் பிரிப்பு தொடர்பான செய்திகள் இன்று முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம் கட்சிப் பணிகளும் முழு வேகத்துடன் நடைபெறும், குறிப்பிட்ட ஊராட்சிகள் மட்டுமே இருப்பதால் அதில் மட்டும் ஒன்றிய பொறுப்பாளர் முழு கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்கிறார்கள் திமுகவினர். இதனால் தேர்தலுக்கு திமுக தற்போதே தயாராகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக