திங்கள், 6 ஜனவரி, 2025

கைது வளையத்தில் கதிர் ஆனந்த்… துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்! நடந்தது - நடப்பது என்ன?

minnambalam.com - Aara  : “ஜனவரி 3-ஆம் தேதி காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடு, அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகம், துரைமுருகனின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்பான இடங்கள் என மொத்தம் நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
துரைமுருகனின் வீட்டில் யாரும் இல்லாததால் நிர்வாக நடைமுறைகள் முடிந்து அவரது வீட்டுக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைவதற்கு அன்று மதியம் 2:30 ஆகிவிட்டது.


அன்று இரவு 10 மணிக்கு துரைமுருகனின் வீட்டில் சோதனையை முடித்து விட்டார்கள். அதேபோல பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை அன்று முடிந்தது.

ஆனால், ஜனவரி 3ஆம் தேதி காலை கிங்ஸ்டன் கல்லூரியில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை ஜனவரி 4 நள்ளிரவு கடந்து நீடித்து முடிந்தது.

நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் கல்லூரியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாகவே… சென்னையில் இருந்து இரவு விமானத்தை பிடித்து டெல்லி பறந்தார் அமைச்சர் துரைமுருகன்.

அமலாக்கத்துறை நெருக்கடியில் இருந்து தன்னையும் தன் மகனையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசியல் ரீதியான காய்களை நகர்த்துவதற்காகவே துரைமுருகன் டெல்லி சென்று இருக்கிறார் என இரவு முதல் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன.

இதுபற்றி அமலாக்கத்துறை மற்றும் திமுக வட்டாரங்களில் விசாரித்த போது…

“2019 மக்களவைத் தேர்தலில் கதிர் ஆனந்த் முதன்முதலாக போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்ததாக கூறி பத்தரை கோடிக்கு மேல் வருமான வரித்துறை கைப்பற்றியது. அந்த விவகாரத்தில் தான் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத் துறையும் உள் நுழைந்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கதிர் ஆனந்துக்கு இதுவரை ஏழு முறை சம்மன்கள் அனுப்பப்பட்டன. இந்த சம்மன்கள் குறித்து கதிர் ஆனந்த் தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தார்.  ‘அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் சென்றால், அவர்கள் கைது வரை கூட செல்வார்கள். எனவே சம்மனுக்கு சட்டரீதியான பதிலை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்க, அதன் அடிப்படையில் பதில் மட்டுமே அளித்து வந்தார் கதிர் ஆனந்த். ஆனால், இது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கதிர் ஆனந்த் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதை உணர்ந்த அந்த துறைக்குள்ளேயே இருக்கும் சிலர்,  துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு, ‘விசாரணையில் ஆஜராவதால் ஒரு பிரச்சனையும் இல்லை. சம்மன்களை தட்டிக் கழிப்பதால் தான் பின்னால் பிரச்சனை ஏற்படும். கெஜ்ரிவால் இப்படித்தான் தட்டிக் கழித்து வந்தார். இப்படி விசாரணைக்கு ஆஜர் ஆவதை தவிர்ப்பதன் மூலம் அமலாக்கத்துறைக்கு சட்ட ரீதியான சாதகங்கள் ஏற்படும். எனவே அவரை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள்’ என தகவல் அனுப்பினார்கள்.

ஆனால் அப்போதும் கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த பின்னணியில்தான் நாங்களே சோதனைக்கு வருகிறோம் என்று சொல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கதிர் ஆனந்த் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை சோதனை முடிந்த நிலையில், கல்லூரியில் இருந்து இரண்டரை கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் , மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஜனவரி 22ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு கதிர் ஆனந்துக்கு புதிய சம்மனை அமலாக்கத்துறை அளித்துச் சென்றிருப்பதாக தெரிகிறது. இந்தத் தகவல் துரைமுருகனுக்கும் துபாயில் இருக்கும் கதிர் ஆனந்துக்கும் தெரியவர இருவரும் சட்ட ரீதியான ஆலோசனைகளில் இறங்கினார்கள்.

முன்னதாக ரெய்டு தொடங்கிய  ஜனவரி 3ஆம் தேதி பகல் பொழுதிலேயே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் துரைமுருகன். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமான சட்ட முயற்சிகளை செய்ய வேண்டும் என துரைமுருகனுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மகன் ஆகியோரை குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கி இருப்பதால்,  இது திமுகவில் மற்றவர்கள் மீதான நடவடிக்கையை விட சீரியஸானது என்று கருதுகிறார் முதலமைச்சர்.

மேலும், துரைமுருகன் மீது கை வைப்பதின் மூலம் திமுக கட்சியின் மீதே ஒரு முத்திரை குத்துவதற்கு அமலாக்கத்துறை மூலமாக பாஜக முயற்சிப்பதாக முதலமைச்சர் கருதுகிறார். அதனால் சட்ட ரீதியான முயற்சிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே குடும்பத்தோடு துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கதிர் ஆனந்துக்கு வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அவர் ஜனவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவதாக ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்.

இதற்குள் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று இரவு சென்னையிலிருந்து 8.45 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டார் துரைமுருகன். அந்த விமானம் தாமதமானதால்,  மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்லலாமா என துரைமுருகனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் துரைமுருகனோ, திட்டமிட்டபடி இரவோடு இரவாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறி அதன்படியே நேற்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு டெல்லி சென்று விட்டார்.

இன்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உள்ளிட்டோரிடம் சட்ட ஆலோசனை நடத்துகிறார் துரைமுருகன். வரும் 22 ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டும் என்ற சூழலில், அதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வது பற்றி ஆலோசனை நடந்திருக்கிறது.

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கதிர் ஆனந்த் ஆஜராக தயார். ஆனால் அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உச்ச நீதிமன்றத்தை அணுகவும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த ஆலோசனைகளை முடித்துவிட்டு இன்று மாலையே சென்னை திரும்புகிறார் துரைமுருகன். நாளை ஜனவரி 6 ஆம் தேதி சட்டமன்றம் கூட இருப்பதால் துரைமுருகன் அவசரமாக டெல்லி சென்று விட்டு அவசரமாக சென்னை திரும்புகிறார் என்கிறார்கள். துரைமுருகனோடு வழக்கறிஞர்களும் ஜெகத்ரட்சகன் எம்பி-யும் டெல்லி சென்றிருக்கிறார்கள்.   முதலமைச்சர் ஸ்டாலினும் இது தொடர்பான சட்ட ரீதியான முயற்சிகள் குறித்து அவ்வப்போது விசாரித்துக் கொண்டிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக