புதன், 4 டிசம்பர், 2024

தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு

 BBC News தமிழ்  :  தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு; காரணம் என்ன?
தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கடந்த 50 வருடங்களில் முதல் முறையாக ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர்.
வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் கூறினார்



ராணுவச் சட்டத்தை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிபர் யோல் கூறினார். எனினும், இதன் கீழ் என்ன குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
ராணுவச் ஆட்சியை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க தென் கொரிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது

நாட்டின் ஆளும் மற்றும் எதிர்கட்சினர் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர்

இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும், அது தவறானது என்றும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவரான ஹான் டோங்-ஹூன் கூறியதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் யோல் இந்தக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க தலைநகர் சோலில் உள்ள நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் குவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்திற்கு விரைந்த போராட்டக்காரர்கள் ''ராணுவ ஆட்சி இல்லை! ராணுவ சட்டம் இல்லை" என்று கோஷமிட்டனர். அவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அழுத்தத்தில் அதிபர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் யூன் சாக் யோலின் கட்சி நடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் தீர்மானங்களுக்கு எதிராக அவரது அரசு போராடி வந்தது.

அரசியல் தாக்குதல்களைத் தடுக்கும் ஜனநாயக விரோத உக்தியாக, ராணுவ ஆட்சியை அறிவிக்கும் நிலைக்கு அவர் இப்போது தள்ளப்பட்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அவரச காலத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தலைவர்கள் செயல்பட முடியாது எனக் கருதப்படும் போது, ராணுவ சட்டத்தின் கீழ் தற்காலிக ராணுவ ஆட்சி அமைக்கப்படும்.

தென் கொரியாவில் கடைசியாக 1979இல் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சி கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக