வெள்ளி, 13 டிசம்பர், 2024

உலக அரங்கில் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?

 BBC News தமிழ்  :  தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு
சென்னையை சேர்ந்த குகேஷ் தொம்மராஜு உலகின் இளம் செஸ் சாம்பியனாகியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை வென்று இந்த வெற்றியை உறுதி செய்தார்.
சீனாவை சேர்ந்த 32 வயது டிங் லிரேனை எதிர்த்து ஆடி, இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார் குகேஷ் தொம்மராஜு.
இந்த வெற்றி மிகவும் சிறப்பானது என்றாலும், இந்தியாவின் செஸ் சாதனைகளில் மூன்றில் ஒரு பங்கு வெற்றியை உறுதி செய்துள்ள தமிழ்நாட்டிற்கு இது ஒன்றும் புதிய தருணமல்ல.



சொல்லப்போனால், குகேஷ் இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டின் நீண்ட செஸ் பாரம்பரியத்தைத் தொடர்ந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்களில் 31 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இங்கு ஒவ்வொரு வாரமும் ஆறு முதல் ஏழு மாநில அளவிலான போட்டிகள் உட்பட ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட சதுரங்கப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகளில், சராசரியாக 500 முதல் 600 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் பலர் 12 வயதுக்குட்பட்டவர்கள்.

அனடோலி கார்போவ் மற்றும் கேரி காஸ்பரோவ் போன்ற ஜாம்பவான்களை ரஷ்யா உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் வெற்றிக்கு பாபி ஃபிஷர் மற்றும் ஹிகாரு நகமுரா போன்ற வீரர்கள் உந்துதல் அளித்துள்ளனர். மேலும், சீனாவும் செஸ் உலகில் ஒரு முக்கிய சக்தியாக உருவாகி வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு தனக்கான இடத்தைத் தொடர்ந்து செதுக்கிக் கொண்டு வருகிறது.

தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்களில் 31 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

பல மாஸ்டர்களை உருவாக்கிய தமிழ்நாடு

கடந்த 1961-ம் ஆண்டு இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன், 1988-ம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்ட்ரான விஸ்வநாதன் ஆனந்த், 2001-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்ட்ரான எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

1970-களில் மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையம், சதுரங்க ஆர்வலர்களின் மையமாக மாறிய காலத்தில் தான் சென்னையின் செஸ் வரலாறு தொடங்கியது என கூறலாம்.

கடந்த 1972-ஆம் ஆண்டில் சென்னையின் சோவியத் கலாசார மையத்தில், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன், 'தால் செஸ் கிளப்பை' நிறுவினார். இது எதிர்காலத்தில் சிறந்த செஸ் வீரர்கள் உருவாகுவதற்கு ஆதாரமாக மாறியது.

"ரஷ்ய கலாசார மையத்தில் இருந்த நூலகத்தில், நான் சதுரங்கம் குறித்த ரஷ்ய மொழி புத்தகங்களைப் படிப்பேன்," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய சர்வதேச மாஸ்டரான ஆரோன். அவருக்கு இன்று வயது 89.

சோவியத் ஆதரவுடன் நடத்தப்பட்டு வந்த கிளப், உயர்தர சதுரங்க பலகைகள், கடிகாரங்கள் மற்றும் புத்தகங்களை செஸ் ஆர்வலர்களுக்கு வழங்கியது, இவை அனைத்தும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு விலைமதிப்பற்றதாக அமைந்தது.

தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு

பட மூலாதாரம், FIDE
படக்குறிப்பு, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் தொம்மராஜு

ஊக்குவித்த சோவியத் கலாசார மையம்

"கலாசார மையத்தில் இருந்த சோவியத் தூதர், எனது ஆர்வத்தைப் பார்த்து ஒரு சதுரங்க கிளப்பைத் தொடங்கச் சொன்னார். நான் மிகவும் மகிழ்ச்சியாக அதை தொடங்கினேன், "என்று ஆரோன் அந்நாட்களை நினைவுகூர்ந்தார்.

"பெற்றோர்கள் இப்போது செஸ் ஆர்வம் கொண்ட தங்கள் பிள்ளைகளை மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள், ஆனால் எங்கள் காலத்தில் எந்த ஊக்கமும் இல்லை. என் அப்பா என்னிடம், 'சதுரங்கம் உனக்கு சோறு போடுமா?' என்று கேட்டார். "அவர் உயிருடன் இருந்திருந்தால், செஸ் எனக்கு மட்டுமல்ல, செஸ் கிளப் நடத்தும் என் மகன் மற்றும் பேரனுக்கும் செஸ் உணவளிக்கிறது என்பதை அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார்" என்று அவர் கூறினார்.

ஓய்வு பெற்ற வங்கியாளரான ஆரோன், இளம் வீரர்களுக்கு சதுரங்கம் கற்றுக் கொடுக்கிறார்.

தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு , விஸ்வநாதன் ஆனந்த்

பட மூலாதாரம், Facebook/Vishwanathan Anand
படக்குறிப்பு, 1984-ல் கிரீஸில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற 14 வயது விஸ்வநாதன் ஆனந்த்

தமிழ்நாடு: செஸ் திறமைகளின் மையம்

கடந்த 1988-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும், ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களை உருவாக்கியது இந்த கிளப்தான்.

"ஆனந்த் எட்டு அல்லது ஒன்பது வயது சிறுவனாக கிளப்பிற்கு வருவார்," என்று ஆரோன் கூறினார்.

"அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். அங்கு தன்னை எதிர்த்து ஆடும் அனைவரையும் விளையாட்டில் அடித்து நொறுக்குவார்," என்கிறார் ஆரோன்.

செஸ் உலகில் ஆனந்த் பெற்ற வெற்றி, ஒரு தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம் அளித்தது. 1987-ஆம் ஆண்டில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வென்றது உட்பட அவரது சாதனைகள், உலகளாவிய சதுரங்க சக்தியாக இந்தியா உருவெடுக்கக் களம் அமைத்தன.

அதேநேரம், இளைஞர்களிடையே சதுரங்கத்தை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது தமிழ்நாடு.

தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு, மானுவேல் ஆரோன்

பட மூலாதாரம், Manuel Aaron
படக்குறிப்பு, சோவியத் கலாசார மையத்தில் சதுரங்க கிளப்பை உருவாக்கிய மானுவேல் ஆரோன்

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 'ஏழு முதல் பதினேழு' திட்டம் 2013-ம் ஆண்டில் பள்ளிகளில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தியது. இது குழந்தைகளை இளம் வயதிலேயே சதுரங்கம் ஆட ஊக்குவித்தது.

2022-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் ஒரு திருப்புமுனை தருணமாக இருந்தது.

இதில், 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, இந்தியாவின் சதுரங்க திறமைகள் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. மேலும், நாடு முழுவதும் செஸ் மீது ஆர்வத்தைத் தூண்டியது.

தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் செயலாளர் ஸ்டீஃபன் பாலசாமி, சென்னையில் ஒலிம்பியாட் போட்டி நடந்த பிறகு பள்ளிகளுக்கு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிகள் தங்கள் சொந்த பயிற்சியாளர்களை நியமித்துள்ளனர். சென்னை மட்டுமின்றி கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு வளர்ந்து வருகிறது. சென்னையைத் தவிர மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம் ஆகிய இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்" என்றார்.

தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு

பட மூலாதாரம், Vijayalakshmi / Facebook
படக்குறிப்பு, எஸ் விஜயலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்

புதிய முகங்களின் எழுச்சி

ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் தொம்மராஜு ஆகியோர் இந்திய சதுரங்கத்தின் இளம் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

வெறும் 19 வயதான பிரக்ஞானந்தா, 2024-ம் ஆண்டில் கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வரலாறு படைத்தார்.

இப்போது 18 வயதாகும் குகேஷ், FIDE (சர்வதேச செஸ் கூட்டமைப்பு) தரவரிசைப்படி ஆனந்தை 2023-ம் ஆண்டில் முந்தினார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இளம் போட்டியாளராகவும் தேர்வு செய்யப்பட்டவர் குகேஷ்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட வீரர்கள் எங்களிடம் இருந்தனர். இப்போது எண்ணிக்கை 25,000 ஆக அதிகரித்துள்ளது, அவர்களில் 15,000 வீரர்கள் FIDE மதிப்பீடுகளைக் கொண்டுள்ளனர்," என்று ஸ்டீஃபன் கூறினார்.

கடந்த 1979ஆம் ஆண்டில் சதுரங்க ஆர்வலர் ரத்ன நாடார் ஏற்பாடு செய்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிவகாசியில் நடைபெற்றன.

"அவர் வீரர்களை ஒட்டகங்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றில் அணிவகுத்துச் செல்லச் செய்தார், இவை அனைத்தும் ஆரம்பகால சதுரங்கப் பலகையின் காய்கள் ஆகும். இந்திய சதுரங்கத்தில் பிஷப் (மந்திரி) முதலில் ஒட்டகமாக இருந்தது" என்று ஆரோன் நினைவு கூர்ந்தார்.

சென்னையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படும் செஸ் அகாடமி, செஸ் திறமைகளை வளர்த்தெடுக்கும் முக்கியமான மையமாக உருவெடுத்துள்ளது.

குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி உட்பட குறைந்தது 15 கிராண்ட் மாஸ்டர்களை இந்த மையம் உருவாக்கியுள்ளது.

"விரைவில் ரஷ்யாவை இந்தியா முந்திவிடும், மெட்ராஸும் மாஸ்கோவை முந்திச் செல்லும்," என்று மானுவேல் ஆரோனின் மகனும் சென்னையில் செஸ் அகாடமி உரிமையாளருமான அரவிந்த் ஆரோன் கூறினார்.

"ஊடக கவனம், அதிக பரிசுத் தொகை மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான நோக்கம் ஆகியவற்றால் சதுரங்கம் ஒரு ஆர்வமான விளையாட்டாக மாறியுள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செஸ் பயிற்சி பெற தீவிரமாக ஊக்குவிக்கிறார்கள், "என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு

பட மூலாதாரம், Manuel Aaron
படக்குறிப்பு, 1979ஆம் ஆண்டில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளை ஏற்பாடு செய்த சதுரங்க ஆர்வலர் ரத்ன நாடார் (இடது); சர்வதேச சதுரங்க அமைப்பின் தலைவராக 1982 முதல் 1995 வரை இருந்த எஃப். காம்போமேன்ஸ் (வலது)

திருவாரூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவில் போன்று, அதன் கலாசார அடையாளங்கள் மூலம் தமிழ்நாடு இந்த பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது.

"கிளாசிக்கல் செஸ் என்ற வடிவத்திலான ஆட்டம் தான், வீரர்களிடையே விளையாடும் தரத்தை மேம்படுத்துகிறது" என்று ஸ்டீபன் கூறினார்.

"விரைவான போட்டிகள் ஒரு நாளில் முடிந்துவிடும். கிளாசிக்கல் செஸ் போட்டிகளை நடத்துவதன் மூலம் மட்டுமே விரைவான செஸ் போட்டிகளை நடத்த முடியும் என்று நாங்கள் விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம். இது கிளாசிக்கல் செஸ் போட்டிகளை அதிகரித்துள்ளது, அதாவது உயர்தர வீரர்கள் உருவாகி வருகின்றனர்" என்று ஸ்டீஃபன் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக