திங்கள், 16 டிசம்பர், 2024

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் முடிவுகள்... முழு விவரம்!

 minnambalam.com - Selvam  : சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் இன்று (டிசம்பர் 15) வெற்றி பெற்றுள்ளனர்.
பத்திரிகையாளர் நலனை காப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1972-ஆம் ஆண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உருவாக்கப்பட்டது.  சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடைசியாக கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், பதிவுத்துறை சட்டத்தின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி என மூன்று அணிகள் களத்தில் இருந்தனர்.



இதில் நீதிக்கான கூட்டணியில் தலைவர் பதவிக்கு சுரேஷ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஹசீப், பொருளாளர் மணிகண்டன், துணை தலைவர்கள் சுந்தர பாரதி, மதன், இணை செயலாளர் நெல்சன் சேவியர் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஒற்றுமை அணியில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் ஷபீர் அகமது, பொருளாளர் எஸ்.பி.லட்சுமணன், துணைத் தலைவர் எஸ்.பிருந்தா, பிரபுதாசன், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 1,502 பத்திரிகையாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் 1,371 வாக்குகள் பதிவானது. அதாவது 91.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அஃசீப் முகமது (734 வாக்குகள்), பொருளாளர் மணிகண்டன் (803 வாக்குகள்),  இணைச்செயலாளர் நெல்சன் சேவியர் (697 வாக்குகள்), துணைத் தலைவர் சுந்தர பாரதி (516 வாக்குகள்), மதன் (599 வாக்குகள்), நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட ஸ்டாலின் (634 வாக்குகள்), பழனிவேல் (596 வாக்குகள்), விஜய் கோபால் (509 வாக்குகள்), அகிலா ஈஸ்வரன் (602 வாக்குகள்) ஆகியோர் வெற்றி வெற்றி பெற்றுள்ளனர். நிர்வாகக் குழு பதவிக்கு ஒற்றுமை அணியில் போட்டியிட்ட கவாஸ்கர் (584 வாக்குகள்) மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக