வியாழன், 12 டிசம்பர், 2024

இந்தியா கூட்டணி தலைமை பதவி யாருக்கு? காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சிகள்

BBC News தமிழ் : மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக லாலு யாதவ் கூறியது என்ன?
லாலு யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.
இதுவரை, பிகார் மற்றும் ஜார்கண்டில் இரு கட்சிகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை இருந்து வருகின்றது.
லாலு யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இதனால் இந்தியா கூட்டணியின் தலைமைப் பதவிக்கு மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக லாலு யாதவ் கூறியிருப்பது பல ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
"இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மம்தாவுக்கு வழங்க வேண்டும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம்" என்று லாலு யாதவ் கூறினார்.

மம்தாவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்தியாளர்கள் அவரிடம் கூறியபோது, "காங்கிரசின் எதிர்ப்பால் எதுவும் நடக்காது. மம்தாவுக்கு தலைமைப் பொறுப்பு கொடுக்க வேண்டும்" எனவும் லாலு யாதவ் தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவும் மம்தாவை ஆதரித்து, தனது தந்தையின் முடிவை ஆமோதித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் தலைமை குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். ஆனால் எந்த முடிவையும் அனைவரின் (கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும்) சம்மதத்துடன் எடுக்க வேண்டும் என தேஜஸ்வி கூறியுள்ளார்.

இதனிடையே, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இப்படிச் செய்வதன் மூலம் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குவதை அவர்களும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் காங்கிரஸ் தலைமை குறித்து கேள்வி எழுப்புவது ஏன்?
காங்கிரஸ் அரசியலை ஆழமாகப் புரிந்து கொண்ட மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான ரஷித் கித்வாய் இதற்கான காரணத்தை விளக்குகிறார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), என்சிபி (சரத் பவார்), திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சிறப்பாக செயல்பட்டதால் எதிர்க்கட்சிகளின் மன உறுதி அதிகமாக இருந்தது.

சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்து விடுவோம் என அவர்கள் நினைத்தனர். ஆனால் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, குறிப்பாக ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில், இது 'இந்தியா' கூட்டணியை பலவீனப்படுத்தியதாக கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

காங்கிரஸால் அவர்களது கதை முன்னேறவில்லை என அவர்கள் கருதுகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் எரிச்சலின் காரணமாகத்தான் இந்தியக் கூட்டணியின் தலைமையை மாற்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் 37 மட்டுமே கிடைத்தது.

அதேசமயம் மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் அதிகபட்சமாக 103 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

ஆனால், 'இந்தியா' கூட்டணியில் காங்கிரசின் தலைமை குறித்து கேள்வி எழுப்பும் கட்சிகளின் செல்வாக்கு ஓரிரு மாநிலங்களுக்கு மேல் இல்லை என்பதும் உண்மை.

அது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அல்லது லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அல்லது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆக இருக்கலாம்.

அதேசமயம் நாடு முழுவதும் காங்கிரஸ் இன்னும் பரவலாக உள்ளது'' என ரஷித் கித்வாய் தெரிவித்தார்.

பிறகு ஏன் காங்கிரஸ் தலைமை மீது இந்தக் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன?

ரஷித் கித்வாய் கூறும்போது, "காங்கிரஸ் அகில இந்தியக் கட்சியாக இருப்பது பற்றி மட்டுமல்ல, இந்தியா கூட்டணியை காங்கிரஸ் நடத்தும் விதம் குறித்தும் அதன் கூட்டணி காட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டணிக்கு ஒரு செயலகம் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளரும் , செய்தி தொடர்பாளரும் இருக்க வேண்டும். அங்கு பொதுவான பிரச்னைகள் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த கூட்டணியில் அவை எதையும் காணவில்லை. அதனால், இந்த கூட்டணியை காங்கிரஸால் நடத்த முடியாது, வேறு கட்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

மறுபுறம், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், என்சிபி (ஷரத்) பவார், சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகியோருக்கு குறைந்த செல்வாக்கு இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. அவர்கள் வேறு எங்கே போவார்கள்? பாஜகவுக்கு போக முடியாது. அதனால் தான் காங்கிரஸ் தன்னிச்சையாக செயல்படுகிறது'' என்கிறார் ரஷித் கித்வாய்.

மதச்சார்பின்மை குறித்த காங்கிரசின் அணுகுமுறையின் விளைவு என்ன ?

மதச்சார்பின்மை போன்ற முக்கியமான பிரச்னையில் காங்கிரசின் அணுகுமுறை அதன் கூட்டணிக் கட்சிகளையும் கோபப்படுத்தியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாபர் மசூதி இடிப்புக்கு உரிமை கொண்டாடி, டிசம்பர் 6-ஆம் தேதி நாளிதழில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) அளித்த விளம்பரத்தால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் கோபமடைந்துள்ளன. காங்கிரஸ் மௌனம் காக்கிறது.

மகாராஷ்டிராவில் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் எதுவும் கூறவில்லை.

"இந்துத்துவா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் முடிவு செய்ய முடியவில்லை. காங்கிரஸ், 'கடினமான இந்துத்துவா' அல்லது 'மென்மையான இந்துத்துவா' அல்லது மதச்சார்பின்மைக்கு ஆதரவாக உள்ளதா என முடிவு செய்ய முடியவில்லை.

தேர்தல் வந்தவுடன், ராகுல் காந்தி நெற்றியில் திலகம் அணிந்து, கோவில்களுக்குச் செல்வார். காங்கிரசின் இந்த அணுகுமுறை இந்திய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் குப்தா.

இந்தியக் கூட்டணியில் காங்கிரசின் தன்னிச்சையாக நடந்துகொள்வது குறித்தும் சரத் குப்தா கேள்விகளை எழுப்பினார்.

அவர் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் எடுக்கும். மற்ற எதிர்கட்சிகளை கலந்தாலோசிக்காது. நாடாளுமன்றத்தில் கூட சக கட்சிகளுடன் காங்கிரஸ் ஒன்றிணைந்து இல்லை." எனவும் ஷரத் குப்தா கூறுகின்றார்.

இந்தியக் கூட்டணியின் தலைவராக மம்தா பானர்ஜி நியமனம் செய்யப்படுவதை ஆதரிப்பதன் மூலம், ராகுல் காந்தி அல்லது ஒட்டுமொத்த காங்கிரசின் தலைமை குறித்து, கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனவா? என்ற கேள்விக்கு, "சமீபத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், இந்திய கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்று கூறினார். ஆனால், ராகுல் காந்தியை தலைவராகவும், நரேந்திர மோடிக்கு மாற்றாகவும் நிலைநிறுத்த வேண்டும் என்பதில் சோனியா காந்தி குறியாக இருக்கிறார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்" என ஷரத் குப்தா பதில் கூறுகிறார்.

மம்தாவுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு குறித்து காங்கிரஸ் கூறியது என்ன?

கடந்த வாரம், மம்தா பானர்ஜி 'இந்தியா' கூட்டணியை வழிநடத்த விருப்பம் தெரிவித்ததை அடுத்து, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), என்சிபி (சரத் பவார்) போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவளித்தன.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூட, தேசிய அளவில் இந்தியக் கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், மம்தா பானர்ஜியை ஆதரித்துள்ளது.

ஆனால் மம்தா பானர்ஜியின் கூற்று குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், அதனை 'ஜோக்' என்றார்.

மேற்கு வங்கத்திற்கு வெளியே திரிணாமுல் எங்கே இருக்கிறது என்றும் அவர் கேட்டார்.

"மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களில் திரிணாமுலின் நிலை என்ன? கோவா, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விக்கு முதலில் திரிணாமுல் பதிலளிக்க வேண்டும்" என மாணிக்கம் தாகூர் கூறினார்.

இந்த மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தனது செல்வாக்கை பரப்ப முயன்றது. ஆனால் அது வெற்றியடையவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக