Hindu Tamil சென்னை: மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழக அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து,
இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
தவறான தகவல்: முதல்வர் ஸ்டாலினின் உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதை சகிக்க முடியாத சிலர், சுரங்க உரிமத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். மேலும், இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துகளைப் பெற்றதாக மத்திய அரசும் தவறான தகவலைத் தெரிவித்துள்ளது.
2023 செப்டம்பர் மாதம், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்தது. உடனேயே, அந்த ஆண்டு அக். 3-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அதில் தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால், நவ. 2-ம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் இந்தக் கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு, நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்.
தொடர்ந்து, மேலூர் பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்டபோதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு, டங்ஸ்டன் உரிமத்தை தனியார் நிறுவனத்துக்கு அளித்தது.
தற்போது மக்களின் எதிர்ப்பையும், முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு மிரண்டு மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடும் கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்ப, சுரங்க ஏலத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்ததாக பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றன. இவற்றை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக