செவ்வாய், 3 டிசம்பர், 2024

திருவண்ணாமலை மகாதீப மலை மண் சரிவில் 7 பேர் உயிரிழப்பு |

  hindutamil.in  :  திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டியது.
 திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர அண்ணாமலையில் இருந்து வழிந்தோடிய மழைநீரால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.


மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் கிரிவல பாதையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது, மகா தீபம் ஏற்றப்படும் மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

மலையில் இருந்து கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தன. வீடுகள் முன்பு ன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. வ.உ.சி. 11-வது தெரு வில் மலைஅடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டன.

அந்த வீடுகளில் இருந்த ராஜ் குமார், மீனா, கவுதம் (8), வினியா (6), மகா (12), தேலிகா (16), வினோதினி (16) ஆகியோர் மண் சரிவில் சிக்கிய தாக தகவல் வெளியானது. திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தேசிய பேரிடர் குழுவினர் 35 பேர் வரவழைக்கப்பட்டு, 2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. இவர்களுடன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேர், மாநில மீட்பு படையினர் 20 பேர். திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர் கள் 40 பேர் என மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால், மண் தளர்வு ஏற்பட்டு. மேலும் பாறைகள் உருண்டு வரும் ஆபத்து உள்ளதால். கடப்பாரைகள் மூலம் மீட்பு பணி நடைபெற்றது. பாதை இல்லாததால், வீடுகளை இடித்து சிறிய ரக பொக்லைன் இயந்திரத்தை, மலை மீது கொண்டு செல்லும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு, இன்று மாலையில் மண் சரிவில் சிக்கிய ஒருவரது உடல் மீட்கப்பட்டது. விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், மகா தீப மலையில் இன்றும் 2 இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, மீட்பு பணி தீவிரமாக நடந்த நிலையில், 3 சிறுவர்கள் உட்பட மேலும் 4 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் ஒருவரது கை, கால் உள்ளிட்ட பாகங்கள் ஆகியவை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மற்றவர்களது உடல்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

முன்னதாக, மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1965-ம் ஆண்டுக்கு பிறகு புயலின் தாக்கம் அதிக அளவு இருந்துள்ளது. திருவண்ணாமலையில் இதுவரை மண் சரிவு ஏற்பட்டதே இல்லை என்று அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக