வியாழன், 12 டிசம்பர், 2024

வாஜ்பாய் கொண்டு வந்த ஈழ அகதிகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த 2003 சட்டம்:

 ராதா மனோகர் : ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இன்னும் 1,40,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை  வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ஆனால் இன்றுவரை இதை இந்தியா நிறைவேற்றவில்லை!
மறுபுறத்தில் இந்த ஒப்பந்தத்தின் அளவை தாண்டி இரு மடங்குகிற்கு மேல் இலங்கை குடியுரிமை வழங்கி விட்டது
இலங்கையில் தற்போது நாடற்றவர்கள் என்ற மக்கள் யாருமே இல்லை!
இந்தியாவில் இன்னும் மேற்குறிப்பிட்ட அளவு தமிழர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள்!
எதெற்கு எடுத்தாலும் திராவிட வெறுப்பை வாந்தி எடுக்கும் மனிதர்கள் இந்த பிரச்சனையின் மூல காரணமான இந்திய அரசை தப்பி தவறியும் கேள்வி கேட்க மாட்டார்கள்
இலங்கை அரசிடம் இருக்கும் நேர்மை கூட இந்திய ஒன்றிய அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை!
இந்த விடயத்தில் எந்த விடயத்திலும் தொடர்பு அற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேறு பூசுவது பலரின்  திராவிட வெறுப்பு பணியாக இருக்கிறது  


ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட கல்லூரி இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கி இருப்பது திமுக அரசு என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்
இன்றும் முகாம் வாழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்தும் இன்னும் பல வாய்புக்களையும் வழங்கி வருவது திமுக அரசுதான்
குடியுரிமை கொடுக்க வேண்டியது ஒன்றிய அரசு
அதற்கு நெருக்கடி கொடுக்க வேண்டியது இலங்கை அரசு மட்டுமல்ல இலங்கை தமிழ் அரசியல் வியாதிகளும்தான்

மீள் பதிவு : இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறார்கள்!
இவர்களின் பிள்ளைகளும் அந்த பிள்ளைகளின் பிள்ளைகளும் இந்தியாவிலேயே பிறந்ததனால் அவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று   முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கேட்கிறார்கள்..
அதை விட மலையக தமிழர்களும் இங்கு இன்னும் அகதிகளாகத்தான் இன்னும் பலர் இருக்கிறார்கள் . அவர்கள் இலங்கைக்கு போக விரும்பவில்லை..
இது பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பெரிதாக குரல் கொடுப்பதாக தெரியவில்லை. இது ஒரு சந்தேகத்துக்கு உரிய விடயம்.  .
இலங்கை வடக்கு மாவட்டத்தில் 11 எம்பிக்கள் இருக்கவேண்டிய இடத்தில் வாக்காளர்கள் தொகை குறைந்ததால் அங்கு தற்போது  6 எம்பிக்களே தெரிவு செய்யப்படுகிறார்கள்.
தமிழக அகதி முகாம்களில் இருக்கும்  தமிழர்கள் மீண்டும் வடமாகாணத்திற்கு குடிபெயர்ந்தால்  அவர்களின் எம்பி தொகுதிகள்அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையே கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களும் புலம் பெயர் தமிழர்களும் இந்த குடியுரிமை மறுப்புக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் மத்தியில் உள்ளது.
ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் வாழும் இவர்களின் சந்ததியினர்  இந்தியர்களாகவே பல விதங்களிலும் வாழுகின்றனர் .
இவர்கள் பலருக்கு இலங்கை ஒரு அந்நிய தேசம்தான் .
அங்குள்ள கல்வி வேலைவாய்ப்பு சமுக சூழ்நிலை எல்லாமே ஒரு அன்னியமாகி போன நிலைதான் பெரிதும் காணப்படுகிறது.
இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் தீர்மானிக்க படவேண்டிய விடயமாகும்.
யாழ்ப்பாண அரசியல்வாதிகளோ  அல்லது  தமிழின விரோத பாஜக அரசியல்வாதிகளோ தீர்மானிப்பது நேர்மை ஆகாது.
இந்தியாவில் இந்தியர்களாகவே மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தமிழர்களின் கருத்தே இதில் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும் .
இதில் அரசியல் செய்ய எண்ணும் எவரையும் வரலாறு நேர்மையானவர்கள் என்று கருதாது.


கி. நடராசன் : : ·: வாஜ்பாய் அரசு கொண்டு வந்த ஈழ அகதிகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த 2003 சட்டம்:
ஜூலை 1, 1987 வரை இந்தியாவில் பிறந்த எவரும் பிறப்பால் இந்திய குடிமக்களாக கருதப்படுவர். ஜூலை 1, 1987 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்று சட்டம் ஒரு புதிய நிபந்தனையையும் வகுத்தது. இந்த சட்டம் 2003ம் ஆண்டு மீண்டும் திருத்தப்பட்டது. அதன்படி
டிசம்பர் 3, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த ஒரு நபர் இந்திய குடிமகனாக கருதப்பட வேண்டுமென்றால், அவரின் பெற்றோர் ஒருவர் கட்டாயம் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும், மற்றொருவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவராக இருத்தல் கூடாது.
இங்குள்ள ஈழ அகதிகள் அனைவரும் சட்டவ விரோதமாக குடியேறியவர்களாகவே இந்திய அரசும், தமிழக அரசும் பதிவு செய்து உள்ளது. இதன்படி ஈழ அகதியை இந்தியர் திருமணம் செய்தாலும் அவருக்கும், அவர் குழந்தைகளுக்கு 2004 சட்டப்படி குடியுரிமை கிடையாது.
2019யில் மட்டுமல்ல 2004 ஆம் ஆண்டு காலத்திலேயே வாஜ்பாய் பிஜேபி அரசு ஈழ அகதிகளுக்கு துரோகம் செய்து உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக