செவ்வாய், 17 டிசம்பர், 2024

தலைமன்னார்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை

வீரகேசரி : தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம்10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்
இவருக்கு வயது  55,
இவர்  தப்பிச் சென்ற நிலையில் இன்று (16) கைது செய்யப்பட்டு   மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற குறித்த நபர் நேற்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர் இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மறுநாள் 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட சடலம் பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது.

குறித்த கொலை தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த தோட்டத்தில் வேலை செய்து வந்த 55 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக குறித்த நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக