புதன், 6 நவம்பர், 2024

Donald Trump: டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகினார்

 zeenews.india.com  -Sudharsan G  :  US Presidential Election 2024, Donald Trump Wins: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் தேர்வு என ஃபாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டோனால்ட் டிரம்ப் 51% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மொத்தமுள்ள 538 எலெக்டோரல் வாக்குகளில், 277 வாக்குகளை டிரம்ப் பெற்றார். மெஜாரிட்டிக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டிரம்ப் தற்போது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 டோனால்ட் டிரம்ப் வெற்றி எதிரொலியாக சர்வதேச பங்குசந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.



கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்விக்கண்ட பின்னர் மீண்டும் தற்போது போட்டியிட்டு அதிபராக தேர்வாகி உள்ளது வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. 1800ஆம் ஆண்டில் அதிபரான க்ரோவர் கிளீவ்லேண்டிற்கு பிறகு ஒரு தேர்தலில் தோல்விக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு வந்த முதல் அதிபர் என்ற பெருமையை டிரம்ப் பெற்றார். தற்போது அமெரிக்க ஊடகங்கள் அதிபர் தேர்தலில் டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளன.

டோனால்ட் டிரம்பின் வெற்றி உரை

அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் தேர்வான நிலையில், துணை அதிபராக ஜே.டி. வேன்ஸ் தேர்வானார். தொடர்ந்து, டோனால்ட் டிரம்ப் அவரது வெற்றிக்கு பின் புளோரிடா நகரில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்னைகளை தீர்ப்பேன். எனது ஆட்சிக்காலம் அமெரிக்க வரலாற்றில் பொற்காலமாக அமையப்போகிறது. அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் அளவிற்கு ஆட்சி நடத்திவேன். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது.

மேலும் படிக்க | டொனால்டு டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: வெற்றியை தீர்மானிக்கும் இந்த 7 மாகாணங்கள்...

கடந்த ஆட்சி அமெரிக்கா சீரழிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை தான் சீரமைப்பேன் என்றும் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் மட்டுமின்றி செனட், மக்கள் சபையிலும் குடியரசுக் கட்சியே முன்னிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் கடின காலகட்டங்களில் தனக்கு துணை நின்ற அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்ட டெஸ்லா சிஇஓவான எலான் மஸ்கிற்கும் தனது நன்றியை தெரிவித்தார், அவரது பணிகளை பாராட்டவும் செய்தார்.

America First

2016ஆம் ஆண்டு அதிபராக தேர்வான பின்னர், 2020ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அவர் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். ஆனால், மீண்டும் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸை வீழ்த்தி தற்போது அமெரிக்க அரசியலில் ஒரு கம்பேக்கை கொடுத்துள்ளார் எனலாம். கொரோனா பெருந்தோற்றுக்கு பிறகு அமெரிக்காவில் பணவீக்கம், வேலைவாய்ப்பு இழப்பு ஆகிய பிரச்னைகள் கடுமையாக நிலவியதால் அதனை தான் சீர்செய்வேன் என தொடர் பிரச்சாரத்தின் வாயிலாக டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது.

எப்போதும் 'America First' என அமெரிக்காவை எப்போதும் முதன்மைப்படுத்தும் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியால் இந்தியாவுக்கு பல அனுகூலமும் உள்ளன, அதே நேரத்தில் சில சவால்களும் உள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

டிரம்ப் வெற்றி: இந்தியாவுக்கான சாதகங்கள்

அதிலும் குறிப்பாக டோனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான நல்லுறவு இருதரப்புக்கும் பல நன்மைகளை அளிக்கலாம். காலிஸ்தான் பயங்கரவாதிகள் பிரச்னையால் கனடா உடன் இந்தியா நல்லுறவு முறித்துக்கொண்ட நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் இருந்தும் இயங்கி வருவதால் அவர்களை முறியடிக்க இந்திய அரசு டோனால்ட் டிரம்பிடம் கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலுவாக்க வேண்டும் என டோனால்ட் டிரம்ப் முழு வீச்சில் களமிறங்கியிருக்கும் சூழலில், அமெரிக்காவிலேயே முதலீடு, அமெரிக்காவிலேயே உற்பத்தி என்ற முழுக்கத்தை டிரம்ப் முன்வைத்திருந்தார். எனினும், டிரம்ப் சீனாவுக்கு எதிரானாவர் என்பதாலும் சீனாவில் அமெரிக்கர்களின் முதலீடுகளை பின்வாங்க வைக்க டிரம்ப் வலியுறுத்தும்பட்சத்தில், சீனாவுக்கு பதில் இந்தியாவில் பல்வேறு வணிக வாய்ப்புகள் குவியலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறு.

இந்தியா - ஜப்பான் - ஆஸ்திரேலியா - அமெரிக்கா ஆகிய நாடுகளின் QUAD கூட்டமைப்பு, டிரம்பின் கடந்த கால ஆட்சியில் பெரும் முன்னேற்றத்தை கண்டது. சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கூட்டுறவு, ஆயுத விற்பனை, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு ராணுவ பயிற்சிகளில் இந்த நான்கு  நாடுகள் இணைந்து செயல்படும், இதற்கு டிரம்ப் புது ரத்தம் பாய்ச்சுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க தற்போதைய இந்திய - அமெரிக்க ராணுவ கூட்டுறவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் வெற்றி: இந்தியாவுக்கான பாதகங்கள்

இருப்பினும் டோனால்ட் டிரம்ப் அவரது கடந்த ஆட்சியில் வெளிநாட்டவர் குடியேற்றத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதனால், H1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியர்களுக்கு அப்போதே அது பெருந்தலைவலியாக இருந்தது. அது இந்த ஆட்சிக் காலத்திலும் தொடர வாய்ப்புள்ளது.

டிரம்ப் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறுகையில்,"டிரம்ப்பைப் பொறுத்தவரை, வர்த்தகம் மற்றும் குடியேற்றம் தொடர்பாக சில கடினமான பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன. இருப்பினும் பல விஷயங்களில், அவர் இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் மிகவும் நேர்மறையான நல்லுறவில் இருக்கிறார்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக