செவ்வாய், 19 நவம்பர், 2024

நடிகை கஸ்தூரிக்கு மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் ஜாமீன் வழங்க கோரிக்கை

 மாலை மலர் :  வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவானார்.

பின்னர் கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில், தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருப்பதாக எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர். கைது செய்ய சென்றபோது நடிகை கஸ்தூரி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். 'எனது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறேன். நான் பேசியதற்கு ஏற்கனவே மன்னிப்பும் கேட்டு விட்டேன். அப்படி இருக்கும்போது கைது செய்வதற்கு ஏன் இப்படி அவசரம் காட்டுகிறீர்கள்' என்றார்.

அதற்கு போலீசார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே கைது செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று அவருக்கு விளக்கினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் பேசிய வீடியோ ஆதாரங்களை காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர், 'எதிர்பாராத விதமாக உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிவிட்டேன். நான் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். தெலுங்கு பேசும் பெண்களை நான் மதிப்பவள்' என்று தெரிவித்தார்.

விசாரணை முடிந்ததும் நடிகை கஸ்தூரியை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம், ஜூஸ், சாண்ட்விச் போதும் என்றார். இதையடுத்து அவற்றை போலீசார் வாங்கி கொடுத்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது கஸ்தூரி, தனக்கு 12 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும், அவனை நான் தான் கவனிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு மாஜிஸ்திரேட்டு, 'மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் நாங்கள் உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது.

எனவே உங்கள் மகனை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என்றார். இதையடுத்து நடிகை கஸ்தூரி தனது மகனை உறவினர்களிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு அவர் புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஒவ்வொரு நாளும் ஜெயிலுக்கு அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக வைக்கப்படுவது வழக்கம். நேற்று சுமார் 15 பெண் கைதிகள் வந்திருந்தனர். அவர்களுடன் ஹாலில் நடிகை கஸ்தூரி வைக்கப்பட்டு இருந்தார்.

கஸ்தூரி சினிமா நடிகை என்பதால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் அவர் நேற்று இரவு ஜெயிலில் தூக்கமின்றி அவதிப்பட்டார். நேற்று பிற்பகலில் ஜெயிலுக்கு சென்றபோது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

நேற்று மதியம் அவர் ஜெயிலில் சாப்பிடவில்லை. நேற்று இரவு கலவை சாதம் வழங்கப்பட்டது. அதை குறைந்த அளவிலேயே அவர் சாப்பிட்டார். இன்று காலையில் பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டது. அதையும் அவர் விரும்பாததால் குறைவாகவே சாப்பிட்டார்.

சக கைதிகளுடன் அடைப்பு ஜெயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர் முறைப்படி கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அதுவரை அவர் சக பெண் கைதிகளுடனேயே அடைக்கப்படுவார்.

அதன்படி நேற்று ஜெயிலில் உள்ள ஹாலில் சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக