திங்கள், 11 நவம்பர், 2024

நீதிபதி டி.குன்ஹா அறிக்கை : சடலத்தை வைத்து கூட பாஜக பணம் சம்பாதித்துள்ளது.. ஜெ.வை சிறைக்கு அனுப்பிய நீதிபதி

 tamil.oneindia.com - Nantha Kumar R : பெங்களூர்: கொரோனா பரவலின்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது.
அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா பிபிஇ கிட் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆணையம் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையால் எடியூரப்பாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் உள்ளனர். முன்னதாக கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பாஜக ஆட்சி நடந்தது. இதில் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவும், அதன்பிறகு பசவராஜ் பொம்மையும் முதல்வராக இருந்தனர்.



இதில் எடியூரப்பா முதல்வராக இருந்த சமயத்தில் கொரேனா பரவல் அதிகரித்தது. கொரோனா பரவலை தடுக்க எடியூரப்பா அரசு நடவடிக்கை எடுத்தது. மாஸ்க், கொரோனா தடுப்பு மாத்திரை, மருந்துகள், சானிடைசர், பிபிஇ கிட் உள்ளிட்ட பல பொருட்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கொள்முதலில் தான் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இனி தம் அடிச்சா ஆப்பு கன்ஃபார்ம்.. புகைப் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த கர்நாடக அரசு

குறிப்பாக பிபிஇ கிட் இந்தியாவில் குறைந்த விலைக்கு கிடைத்த நிலையில் அதனை சீன நிறுவனங்களிடம் முதல்வர் எடியூரப்பா, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு அதிக விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கர்நாடகா அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக கர்நாடகா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். இவர் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியவர். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மைக்கேல் டி குன்ஹா செயல்பட்டபோது தான் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து தண்டனையை வழங்கினார்.

அதன்பிறகு அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியானார். தற்பாது ஓய்வு பெற்ற நிலையில் பாஜக அரசின் ஊழல் புகார் பற்றி விசாரிக்கும் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை என்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாதம் காலஅவகாசம் கோரப்பட்டுள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பிபிஇ கிட்டில் கோடிக் கணக்கில் ஊழல்.. கர்நாடகா பாஜகவுக்கு செக் வைத்த குன்ஹா ரிப்போர்ட்

இதற்கிடையே தான் இடைக்கால அறிக்கை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் எடியூரப்பா அரசு அதிக விலைக்கு 2 சீன நிறுவனங்களிடம் இருந்து பிபிஇ கிட் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு எடியூரப்பா மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோர் மீது வழக்குப்பதிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது எடியூரப்பாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பிரியங்க் கார்கே கூறியதாவது: கர்நாடகா பாஜக அரசு கடந்த 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிபிஇ கிட் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிபிஇ கிட்கள் சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. பிபிஇ கிட் இங்கு குறைந்த விலையில் கிடைத்தாலும் பாஜக அரசு சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது.
முடா ஊழல்: லோக் ஆயுக்தா போலீசில் ஆஜர்- சித்தராமையாவிடம் 2 மணிநேரம் கிடுக்குப் பிடி விசாரணை!

விசாரணை அறிக்கையில் எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் Big Pharmaceuticals எனும் நிறுவனத்தில் இருந்து 1 லட்சம் பிபிஇ கிட் அதேபோல் டிஎச்பி குளோபல் ஹாங்ஹாங் நிறுவனத்திடம் இருந்து 2 லட்சம் பிபிஇ கிட் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களிடம் ஒரு யூனிட் பிபிஇ கிட் ரூ.2,117-க்கு வாங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 2020 மார்ச் 14ம் தேதி கர்நாடகா அரசின் மாநில மருத்துவ சப்ளை கார்ப்பரேஷன் லிமிடெட் ஒரு பிபிஇ கிட்டை ரூ.333.4 க்கு வாங்கி உள்ளது.

மேலும் வெளிநாடு நிறுவனங்களிடம் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட ரூ.62 கோடி மதிப்பிலான பொருட்களுக்கு ரூ.21.35 கோடி போக்குவரத்து செலவாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் 2 விலைகளில் பிபிஇ கிட் என்பது வாங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வைத்து கூட பாஜக பணம் சம்பாதித்துள்ளது. இதன்மூலம் உடலை வைத்து பணம் சம்பாதிப்பதை தான் பாஜக பிரதானமாக கொண்டுள்ளது என்பது தெளிவாகி உள்ளது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில் தான் கர்நாடகா பாஜக மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மைக்கேல் டி குன்ஹா அறிக்கையில் வழக்கு தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தான் சிக்கலுக்கு காரணமாகும். அதோடு இந்த விவகாரத்தை கர்நாடகா காங்கிரஸ் எளிதில் விடாது.மேலும் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தான் தற்போது கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ளார். இதனால் எடியூரப்பா மூலம் விஜயேந்திராவையும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கலாம்.

இதற்கிடையே தான் தன் மீதான குற்றச்சாட்டை எடியூரப்பா முற்றிலுமாக மறுத்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கர்நாடகா பாஜகவினர் காங்கிரஸ் கட்சி பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். அதாவது தற்போதைய முதல்வர் சித்தராமையா மீது மைசூர் முடா நிலம் முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு பதிலடியாக எடியூரப்பாவை பழிவாங்கும் நடவடிக்கையில் கர்நாடகா அரசு ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக