புதன், 6 நவம்பர், 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்:டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்! முந்துவது யார்?

 BBC com : அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 12 மாகாணங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விரிஜினியா ஆகிய மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் இதுவரை 90 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா ஆகியவற்றை வசப்படுத்தியுள்ள அவர் 27 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.



இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

மேலும் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பாக டிம் வால்ஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பாக ஜேடி வான்ஸ் போட்டியிடுகின்றனர்.

இப்படி மக்கள் வாக்களித்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பதைத் தீர்மானிப்பது ‘தேர்வாளர் குழு’ தான்.

ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகை அளவைப் பொறுத்தே வாக்காளர் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைகிறது. வாக்காளர் குழுவில் மொத்தமாக 538 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு உறுப்பினருக்கும் தேர்தலில் ஒரு வாக்கு இருக்கிறது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால் அதிபர் தேர்தலில் வெற்றி பெறலாம்.

அதிபர் தேர்தலில் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறாரோ, அவர்களுக்கே வாக்காளர் குழு உறுப்பினர்கள் சார்பில் அனைத்து வாக்குகளும் செலுத்தப்படுகிறது. பெரும்பாலான மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றன.

தீர்மானிக்கும் மாகாணங்கள்

அதில் இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க ஏழு மாகாணங்கள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன. அவை அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகும். இந்த 7 மாகாணங்களில் மட்டும் 93 தேர்வாளர் குழு வாக்குகள் உள்ளன.

இந்த ஆண்டு இரு போட்டியாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்ததன் காரணமாக, தேர்தல் முடிவுகள் மிகவும் தாமதமாக வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது?

வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் கணக்கிடப்படும்.

உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் கேன்வாசிங் (Canvassing) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில் தனிப்பட்ட வாக்குகளைச் சரிபார்க்கிறார்கள் மற்றும் எண்ணுகிறார்கள்.

கேன்வாசிங் செயல்முறையில் யார் பங்கேற்கலாம், வாக்குகள் செயலாக்கப்படும் வரிசை மற்றும் எந்தெந்த பகுதிகள் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன, வாக்கு எண்ணிக்கையில் பக்கச்சார்பான பார்வையாளர்கள் எவ்வாறு கண்காணிக்கலாம் மற்றும் தலையிடலாம் என்பது உள்பட ஒவ்வொரு மாகாணத்திலும் வட்டாரத்திலும் தேர்தல் தொடர்பான கடுமையான விதிகள் உள்ளன.

குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியானால், அது செய்தி ஊடகங்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாது அத்தகைய முடிவுகள் மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டரீதியான சவால்கள் போன்ற பெரிய பிரச்னைகளையும் எழுப்புகின்றன.

அதிபர் தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் என்ன நடக்கும்?

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 முடிவுகள்

ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வாக்கும் இறுதி முடிவுகளில் சேர்க்கப்பட்டவுடன், மறுவாக்கு எண்ணிக்கை போன்ற செயல்முறைகள் முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள், முதலில் உள்ளூர் அதிகார வரம்புகளில், பின்னர் மாகாண அளவில், சான்றளிக்கப்படுகின்றன.

பிறகு ஒரு மாகாண நிர்வாகி (பொதுவாக ஆளுநர்) ‘தேர்வாளர் குழுக்களில்’ தங்கள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் பட்டியலுக்கு சான்றளிக்கிறார். இந்த வாக்காளர்கள் டிசம்பர் 17 அன்று அந்தந்த மாகாணங்களில் கூடி வாக்களித்து, அதை வாஷிங்டனுக்கு அனுப்புகிறார்கள்.

ஜனவரி 6 அன்று, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை கூடி, தேர்வாளர் குழு வாக்குகளை எண்ணும் செயல்முறையில் ஈடுபடும். அதற்கு தற்போதைய துணை அதிபர் தலைமை தாங்குவார்.

புதிய அதிபர் எப்போது பதவி ஏற்பார்?

இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர், 2025, ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.

அமெரிக்க வரலாற்றில் நடைபெறவிருக்கும் 60வது அதிபர் பதவியேற்பு விழா இது.
இந்த நிகழ்வில் புதிய அதிபர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியுடன் பதவியேற்பார், பின்னர் தொடக்க உரையை நிகழ்த்துவார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக