செவ்வாய், 26 நவம்பர், 2024

அமெரிக்க ராணுவத்தில் இருந்து திருநங்கைகள் நீக்கம்? டிரம்புக்கு என்ன கோபம்?

 மின்னம்பலம் - Kumaresan M :  திருநங்கைகள் மீது டிரம்புக்கு என்ன கோபம்… பதவியேற்றதும் அந்த முடிவு?
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டிரம்ப் பொறுப்பேற்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அவர் பதவியேற்கிறார். அதன்பிறகு, அவர் பல அதிரடிகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்து வரும் 15 ஆயிரம் திருநங்கைகளை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.



கடந்த முறை டிரம்ப் பதவியேற்ற போது, திருநங்கைகள் ராணுவத்தில் பணியாற்ற அனுமதிப்பதால் மருத்துவ செலவுகள் மற்றும் சில இடையூறுகள் இருப்பதாக கூறி அவர்களை பணியில் அமர்த்தும் சட்டத்தை ரத்து செய்தார். ஆனால் பைடன் வந்த பிறகு, அந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார். இதனால் , ஏராளமான திருநங்கைகள் அமெரிக்க ராணுவத்தில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

அப்போது, அமெரிக்காவின் ஆயுதப் படைகளில் பணியாற்ற தகுதியுள்ள அனைத்து அமெரிக்கர்களும் பணியாற்ற முடியும் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. பாலின அடையாளம் இராணுவ சேவைக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று  பைடன் நம்புகிறார், அமெரிக்காவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் காணப்படுகிறது என்று வெள்ளை மாளிகை கூறியது.

இந்த நிலையில், மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டிரம்ப், திருநங்கைகளை ராணுவத்தில் சேர்க்க கூடாது என்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே ,அமெரிக்க ராணுவத்தில் பணி புரியும் திருநங்கைகளை பணியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ ரீதியாக ராணுவத்தில் பணியாற்றத் தகுதியில்லை என்று கூறி நீக்கப்படவுள்ளனர்.

உலகில் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் , தென்அமெரிக்க நாடுகள் என 30 நாடுகளில் திருநங்கைகள், திருநம்பிகள் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.

திருநங்கைகளை ராணுவ பணியில் சேர்ப்பதற்கு ஆதரவாக பல கருத்துகள் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட மக்களை ராணுவத்தில் பணியில் சேர்க்காதது அவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல முன்னேறிய நாடுகள் திருநங்கைகளை ராணுவத்தில் சேர்க்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

–எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக