’மின்னம்பலம் - christopher : அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து நடந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி இன்று (நவம்பர் 13) கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரித்தார்.
அங்கு படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் கண்டு, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அவருக்கு சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் என்ன நடந்தது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம் கொடுத்தனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், “மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரது தாயாருக்கு மருத்துவமனையில் சரியான முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்குள்ள மருத்துவர் சொன்னதை கேட்டுவிட்டு இன்று காலை மருத்துவமனைக்கு வந்து மருத்துவர் பாலாஜியுடன் அரை மணி நேரம் பேசியுள்ளார். அதன்பின்னர் தான் தவறான முடிவெடுத்து மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் இன்று மாலை 3 மணியளவில் பல்வேறு மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்.
இந்த குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக