சனி, 16 நவம்பர், 2024

உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து... 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

 மின்னம்பலம் செல்வம் : உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லெட்சுமிபாய் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவில் 54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், நேற்று (நவம்பர் 15) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச துணை முதல்வர் ப்ரேஜேஷ் பதாக், “மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மாதம் தீ விபத்து ஒத்திகை நடைபெற்றது.

இருப்பினும் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். விசாரணை நிறைவடைந்ததும் அதற்கான காரணம் தெரியவரும்” என்றார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக