வீரகேசரி : ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் ஒரு பெரும் அலையடித்து ஓய்ந்ததைப் போன்றதொரு அமைதி ஏற்பட்டது.
ஆனால், புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அனைவரும் எதிர்பார்த்ததைப் போன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் அரசியல்வாதிகளதும் கட்சிகளதும் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கும் வகையிலேயே மக்கள் தீர்ப்பு அமைந்திருந்தது.
கடந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 90க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்தனர்.
அவர்களில் தமது தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வங்கிகளைக் கொண்டிருந்த பலரும் இருந்தனர். அவர்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்பதில் அவர்கள் அலாதி நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால், அது நடக்கவில்லை. இந்த முடிவானது பொதுத் தேர்தலில் அவர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது எனலாம்.
2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வெறும் 3 ஆசனங்களை மாத்திரமே மக்கள் வழங்கியிருந்தனர். அந்த 3 ஆசனங்களைக் கொண்ட கட்சியைச் சேர்ந்த தலைவரே இன்று அரச தலைவராகியிருக்கின்றார்.
எனவே தேசிய மக்கள் சக்தியின் மீது திரும்பியுள்ள இந்த மக்கள் அலை, பொதுத் தேர்தலிலும் செல்வாக்கு செலுத்தும் என்பது அனைவரதும் கணிப்பாகவுள்ளது.
நபர்கள் யார் என்பதைக் கூறாமல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர்களின் பிரசாரம் அமையலாம் என்றும், அவர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசியல் ஆய்வாளர்கள் மாத்திரமின்றி, ஏனைய பிரதான கட்சிகளின் நிலைப்பாடு கூட இதுவாகவே உள்ளது. எனவே ரணில் விக்கிரமசிங்க தரப்பும், சஜித் பிரேமதாச தரப்பும் தாம் ஒரு பலமான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த இரு தரப்புமே பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மும்முரம் காண்பிக்கவில்லை. முயன்றாலும் அந்த முயற்சி தோல்வியில் கூட முடிவடையலாம் என்பது இவர்களின் கணிப்பாகவுள்ளது.
அந்த வகையில், தற்போது ரணில் மற்றும் சஜித் அணிகளுக்கிடையில் யார் அடுத்த எதிர்க்கட்சி என்ற போட்டி ஆரம்பித்துள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு அடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் பதவியே முக்கியத்துவமுடையதாகக் காணப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் என்று கூட அழைக்கப்படுகின்றார். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை அடிக்கடி சுட்டிக்காட்டி, மாற்றுப் பிரதமர் என்ற பொறுப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிறைவேற்றத் தவறிவிட்டதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ரணில் விக்கிரமசிங்க மாத்திரமின்றி பெரும்பாலானோரின் நிலைப்பாடும் கூட இதுவாகவே உள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்குரிய கடமைகளை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை என்ற பரவலான விமர்சனம் இன்றும் அவர் மீது முன்வைக்கப்படுகிறது.
அவரது பலவீனமே ஜனாதிபதித் தேர்தலை மும்முனைப் போட்டியாக்கி, மூன்றாமிடத்தில் கூட இல்லாத ஒரு கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சி அரசியல் தேசிய அரசியலில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை. அதனால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கத்துக்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படவுமில்லை.
ஆனால், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் இவ்வாறான பலமற்ற ஒரு எதிர்க்கட்சி இருந்துவிடக் கூடாது.
இலங்கையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களின் பின்னரும் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களிலும் அந்தக் கட்சியே பாராளுமன்ற அதிகாரத்தையும் கைப்பற்றியது. சில பாராளுமன்றங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் மக்கள் வழங்கினர்.
இலங்கையின் 8ஆவது பாராளுமன்றத் தேர்தல் 1977 ஜூலையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தேசிய அரசுப் பேரவைக்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது. 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 1970 தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது.
இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி 1977 ஆம் ஆண்டு மூன்றில் இரண்டுக்கும் அதிகமான, அதாவது ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது.
168 ஆசனங்களில் 140 ஆசனங்களை தன்வசப்படுத்தியது. மக்களால் வழங்கப்பட்ட இந்த அதியுயர் பெரும்பான்மையால் பல்வேறு ஜனநாயக விரோத செயற்பாடுகள் கூட இடம்பெற்றன.
1982ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்படாமல் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பாராளுமன்றத்தின் ஆட்சி காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச ஆட்சியில் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது. எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. நாடு மக்களாட்சியை எதிர்பார்த்தது.
17 ஆண்டு கால ஐ.தே.க. ஆட்சி 1994இல் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இன்று வரை ஐ.தே.க.வால் தனித்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலைமையே காணப்படுகிறது.
மக்கள் வழங்கிய ஆணையை எதேச்சதிகாரமாகப் பயன்படுத்தியதால் வந்த விளைவே இது. உள்நாட்டுப் போரினாலும், அடக்குமுறையினாலும் மக்கள் களைப்படைந்திருந்தனர்.
அதனால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துக்கு அரசமைக்க தேவையான பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 1994, 2000, 2004ஆம் ஆண்டுகளில் சாதாரண பெரும்பான்மையுடைய அரசாங்கங்களே காணப்பட்டன.
எனினும் 10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் 2010இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது.
நாட்டில் ஊழல், மோசடிகள் உச்சம் தொட்டன. 2015இல் கூட்டணி அரசாங்கத்துக்கு சாதாரண பெரும்பான்மை காணப்பட்ட போதிலும், மீண்டும் 2020இல் ராஜபக்ஷ ஆட்சிக்கு மூன்றில் இரண்டு கிடைக்கப் பெற்றது. ஆனால் அந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை.
இந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளின.
இவ்வாறானதொரு வரலாற்றுத் தவறு மீண்டும் இடம்பெறுவதற்கு மக்கள் வாய்ப்பளித்து விடக் கூடாது. அதேபோன்று எதிர்க்கட்சியாகப் போகும் கட்சியும் அதன் உண்மையான பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதை மாத்திரமே தமது நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சி செயற்படக் கூடாது. அதேவேளை 2015 – 2019 காலத்தில் அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானத்துக்கும் எதிர்ப்பினை வெளியிடாத எதிர்க்கட்சியைப் போன்றும் இருந்து விடக் கூடாது.
இதற்கு முந்தைய ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் வழமை மாறாது ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கே ஆட்சியை வழங்கியிருந்தனர். ஆனால், 2022இல் ஏற்பட்ட நிலைமை மக்களை மாற்றி யோசிப்பதற்கு வழியமைத்துக் கொடுத்தது. அதன் காரணமாகவே முதன் முறையாக இடதுசாரி கொள்கையுடைய கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர்.
ஆனாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 5,634,915 வாக்குகள் வழங்கப்பட்டன. எனினும் அவர் 50 சதவீத வாக்குகளைப் பெறாமையால் இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டது. அதில் அவர் 105, 264 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இரண்டாம் விருப்பு வாக்குகளும் உள்ளடங்களாக 5,740,179 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். எவ்வாறிருப்பினும் இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரும் அவர் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 43.1 சதவீதமாகும்.
அந்த முடிவின் அடிப்படையில் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சாதாரண பெரும்பான்மையைப் பெற முடிந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது என மதிப்பிடப்படுகிறது.
ஆயவொசi.டம இணையதளத்தின் கணிப்பிற்கமைய, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர்கள் அனைவரும் ஓர் அரசியல் கட்சி எனக் கருதினால், அப்பெறுபேற்றின்படி தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் சுமார் 105 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சஜித் பிரேமதாச தரப்பு 78 ஆசனங்களையும், ரணில் விக்கிரமசிங்க அணி 37 ஆசனங்களையும், அரியநேத்திரன் அணி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கும் ஆயவொசi.டம கணிப்பிட்டுள்ளது.
அவ்வாறெனில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி எதிர்தரப்புக்கு சுமார் 120 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் இதேவிகிதத்தில் கட்சிகள் பெறும் வாக்குகள் அமையும் என எதிர்பர்க்க முடியாது என்றாலும், எதிர்க்கட்சிகள் தமக்கு கிடைக்கும் பலத்தை ஒருபோதும் அரசாங்கத்தை வீழ்த்தும் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எத்தணிக்கக் கூடாது. அவ்வாறான அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெற்றால் நாட்டில் அமைதியற்றதொரு சூழல் ஏற்படுவதற்கும் வாய்ப்பிக்கிறது.
2015ஆம் ஆண்டு தேர்தலில் சுயாதீன வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன 6 217 162 (52.25%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் அதே ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கூட அதாவது 113 ஆசனங்கள் கூட கிடைக்கப்பெறவில்லை. ஐக்கிய தேசிய கட்சி கூடிய வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதற்கமைய ஐ.தே.க.வுக்கு 13 போனஸ் ஆசனங்களும் உள்ளடங்களாக பாராளுமன்றத்தில் 106 ஆசனங்கள் கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 83 ஆசனங்களையும், 12 போனஸ் ஆசனங்களும் உள்ளடங்களாக 95 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை தமிழரசுக்கட்சி 14 ஆசனங்களையும் இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக 16 ஆசனங்களைப் பெற்றது.
ஜே.வி.பி. இரு போனஸ் ஆசனங்கள் உள்ளடங்களாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையிலேயே 2018ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கிளர்ச்சியொன்றை ஏற்படுத்தினார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த போதே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அவரது கட்சியினருக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கி புதிய ஆட்சியொன்றை உருவாக்க முயற்சித்தார். எனினும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாகவும், நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாகவும் அவரது நியமனங்கள் இரத்து செய்யப்பட்டன.
அன்று அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கப்பட்டிருந்தால், 52 நாட்கள் அரசாங்கமே 2020 வரை தொடர்ந்திருந்திருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக விரோதமாக நியமிக்கப்பட்ட அந்த அரசாங்கத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது ஜே.வி.பி. உட்பட சகல கட்சிகளும் அதற்கு ஆதரவளித்து அதனை நிறைவேற்றின.
ஆங்கு கட்சி பேதத்துடன் ஏனைய கட்சிகள் செயற்பட்டிருந்தால் அந்த ஜனநாயக விரோத அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் தடுத்திருக்க முடியாது. அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையாலும், எதிர்க்கட்சிகள் கட்சி பேதமின்றி ஜனநாயகத்துக்காக முன்நின்றமையால் நன்மையே நடந்தது. எனவே இவ்வாறான வரலாறுகள் தொடர்பிலும் இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் சிந்திக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட வயதில் மூத்த அரசியல்வாதிகள் பலரும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளனர். உண்மையில் இது வரவேற்கத்தக்க தீர்மானமாகும். புதிய முகங்களுக்கும் இளையோருக்கும் புதிய பாராளுமன்றத்தில் வாய்ப்புக்கள் வழங்குவதற்கு இது வழிவகுக்கும்.
புதிய முகங்களை தெரிவு செய்யும் போது மக்களும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அதேவேளை, கட்சிகளும் தேசிய பட்டியலுக்குள் உள்வாங்குபவர்கள் குறித்து முற்போக்காக சிந்திக்க வேண்டும்.
முந்தைய தேர்தல்களில் தோல்வியடைந்தவர்களுக்கோ தமது விசுவாசிககள் என்பதற்காக வர்த்தகர்களுக்கோ தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கக் கூடாது. எனவே இந்த பொதுத் தேர்தலானது பலம்மிக்க ஒரு எதிர்க்கட்சியை எதிர்பார்க்கும் அதே வேளை, பாரம்பரிய மாற்றங்களையும் நோக்காகக் கொண்டுள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் அரசியல்கட்சிகள் எனில், அத்தேர்தல் பெறுபேறு அடிப்படையில் அவர்கள் கைப்பற்றியிருக்கக்கூடிய பாராளுமன்ற ஆசனங்கள்:
-எம்.மனோசித்ரா-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக